ஆதி திராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்! சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

ஏற்கனவே இருந்த நடைமுறையைப் பின்பற்றி
ஆதி திராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்!
சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்!

தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்


தமிழக அரசு ஆசிரியர் பணி நியமனங்களுக்கான காலி இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் படிப்படியாக நடத்தி வருகிறது. ஆசிரியர் நியமனங்களுக்கான நடைமுறையில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பினும், அதற்குப் பல்வேறு முனைகளிலிருந்து எதிர்ப்புகள் இருப்பினும், அந்த நடைமுறையை அரசு தீவிரமாகப் பின்பற்றி வருகிறது.  குறிப்பாக, ஆசிரியர் நியமனத் தேர்வு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு என இரட்டைத் தேர்வு முறைகள் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்குப் பெரும் சுமையாக உள்ளது எனினும் அதனை ஏற்றுப் பின்பற்றுகிற நிலை உருவாகியுள்ளது.  இவ்வாறு ஆசிரியர்களை நியமனம் செய்யும் நடைமுறையிலும் தமிழக அரசின் ஓரவஞ்சனையான அணுகுமுறை வெளிப்படுகிறது.  

குறிப்பாக, ஆதி திராவிடர் நலப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதில் திட்டமிட்டே தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.  கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் 100 விழுக்காடு ஆசிரியர் நியமனங்களை நிறைவேற்றியிருக்கிற தமிழக அரசு, ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் காலந்தாழ்த்தி வருகிறது.  ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் ஆதி திராவிடர் அல்லாத இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி, அதனடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.  இதன் பின்னணியில் அதிகார வர்க்கத்தைச் சார்ந்தவர்களும், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் உள்ளதாகத் தெரிய வருகிறது.  தற்போது நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதைக் காரணம் காட்டி ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தைத் தமிழக அரசு முற்றிலும் நிறுத்தி வைத்துள்ளது.  அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிப்பதுடன் உடனடியாக ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் கடந்த காலத்தில் இருந்த நடைமுறையையே பின்பற்றி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் அரசின் நிலைப்பாடு வேதனைக்குரியதாக உள்ளது.  அதாவது, ஓவியம், இசை, கைத்தறி போன்ற துறைகளுக்கான சிறப்பு ஆசிரியர்கள் சுமார் 16,000 பேர் பகுதி நேர ஆசிரியர்களாக மாதம் ரூ. 5,000க்கு மட்டுமே பணியாற்றி வருகிறார்கள்.  அவர்களை வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.  இந்த முடிவை தமிழக அரசு உடனடியாகக் கைவிட்டு அவர்களை முழு நேர ஆசிரியர்களாகப் பணி நியமனம் செய்ய வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்