மராட்டிய மாநிலத்தில் தலித்துகள் மூவர் சாதிவெறியர்களால் கொடூரப் படுகொலை தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் மும்பையில் விடுதலைச் சிறுத்தைகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மராட்டிய மாநிலத்தில் தலித்துகள் மூவர் சாதிவெறியர்களால் கொடூரப் படுகொலை
தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் மும்பையில்
விடுதலைச் சிறுத்தைகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தொல்.திருமாவளவன் அறிக்கை


மராட்டிய மாநிலம், அகமது நகர் மாவட்டம், ஜலகிபே எனும் கிராமத்தில் கடந்த அக்டோபர் 20 அன்று தலித்துகள் மூன்று பேர் சாதிவெறியர்களால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  ஜாதவ் எனும் தலித் வகுப்பைச் சார்ந்த மூவரும் தாய், தந்தை மற்றும் மகன் என ஒரே குடும்பத்தினர் ஆவர்.  தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் தனியே வசித்து வந்த அவர்களை நள்ளிரவில் சென்று துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளனர்.  சுமார் ஒரு வார காலத்திற்குப் பின்னரே அவர்களின் உடற்கூறுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். படுகொலை நடந்து 10 நாட்கள் கடந்த நிலையிலும் காவல்துறையினர் ஒரே ஒரு கொலையாளியைக்கூட அடையாளம் காணவில்லை என்பது வெட்கக்கேடானதாகும்.  குற்றவாளிகள் யார் என்பதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை என்று காரணம் சொல்லி காவல்துறை காலந்தாழ்த்தி வருவதுடன் விசாரணை என்ற பெயரில் படுகொலையானவர்களின் உறவினர்களுக்குப் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.  படுகொலையில் தொடர்புடையவர்களாக சந்தேகப்படும் சாதிவெறியர்களின் பெயர்களை புகாரில் தெரிவித்திருந்த நிலையிலும் அவர்களைக் காவல்துறை கைது செய்யவோ, விசாரிக்கவோ இல்லை என்பது வேதனைக்குரியதாகும். சாதிவெறியர்களின் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தையும் காவல்துறையின் தலித் விரோதப் போக்கையும் விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.  கொடூரமான இப்படுகொலை வழக்கை மையப் புலனாய்வு (சி.பி.ஐ.) விசாரணைக்கு உட்படுத்திட வேண்டுமெனவும், சாதிவெறி கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும் இந்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் புதுவையிலும் வருகிற 21-11-2014 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  அத்துடன் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடகாவில் பெங்களூருவிலும், கேரளாவில் இடுக்கியிலும், ஆந்திராவில் விஜயவாடாவிலும், தெலங்கானாவில் ஐதராபாத்திலும் அதே நாளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.  இப்படுகொலையைக் கண்டித்து மராட்டிய மாநிலம் மும்பையில் 22-11-2014 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் எனது (தொல்.திருமாவளவன்) தலைமையில் நடைபெறும்.  தமிழகம், புதுவை உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும், மும்பையிலும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் பெருவாரியாகப் பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.  

அத்துடன், இந்தியாவெங்கிலும் தொடரும் இத்தகைய காட்டுத்தனமான சாதிவெறியாட்டங்களை ஒடுக்குவதற்கு வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை மேலும் கூடுதலாக வலிமையாக்கிட வேண்டுமெனவும், அச்சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்திட இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

இவண்

தொல்.திருமாவளவன்