தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வலியுறுத்தி சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

கொழும்பு நீதிமன்றத்தில் அய்வருக்குத் தூக்குத் தண்டனை

தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வலியுறுத்தி
சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

தொல்.திருமாவளவன் அறிக்கை

தமிழக மீனவர்கள் அய்வருக்கு தூக்குத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என 2011ஆம் ஆண்டு சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட எமர்சன், அகஸ்டின், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய அய்வரையும் போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்குப் புனைந்து சிறைப்படுத்தியது சிங்கள அரசு. அவர்கள் போதைப் பொருள் கடத்தினார்கள் என்பதற்குப் போதிய ஆதாரங்கள் எதுவும் நிறுவப்படவில்லை.  எனினும் சிங்கள நீதிமன்றம் ஈவிரக்கமற்ற முறையில் இந்தக் கொடூரமான தீர்ப்பை அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1976லிருந்து சிங்கள நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை வழங்கப்படவில்லை என்று தெரியவருகிறது. திடீரென தற்போது இவ்வாறு தீர்ப்பளித்திருப்பது ஏனென்று விளங்கவில்லை. மீண்டும் விடுதலைப்புலிகள் எழுச்சி பெற்று விடுவார்களோ என்கிற அச்சத்தில் பீதி அடைந்திருக்கிற சிங்கள ஆளும் வர்க்கம் தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்தத் தீர்ப்பை அளித்திருக்கலாம் எனத் தெரியவருகிறது. உலகெங்கும் மரண தண்டனைக்கு எதிரான குரல் வலுத்து வரும் சூழலில் சிங்கள நீதிமன்றம் அண்டை நாட்டைச் சார்ந்த குடிமக்களுக்கு இவ்வாறு கடுமையான தீர்ப்பை அளித்திருப்பது மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக மீனவர்கள் மட்டுமின்றி வியாபாரம் செய்யச் செல்லும் தமிழர்கள், மலையாளிகள் ஏராளமானமானோர் பொய் வழக்குகளில் சிறைப்படுத்தப்படுவது நீடித்து வருகிறது.  அதிலும் குறிப்பாக போதைப் பொருள் கடத்தும் வழக்குகளில்தான் பெரும்பாலானவர்கள் சிறைப்படுத்தபட்டு வருகின்றனர்.  இருபது ஆண்டுகள், முப்பது ஆண்டுகள் என விசாரணை கைதிகளாக அல்லல்படும் அவலம் தொடர்கிறது.  இந்திய அரசு கொழும்பு சிறையில் வாடும் தமிழர்களைப் பற்றியோ மலையாளிகளைப் பற்றியோ சிறிதும் கவலைப்படுவதில்லை.  இந்திய அரசின் மற்றும் மாநில அரசுகளின் மெத்தனப்போக்கே இன்றைய இந்த நிலைமைக்குக் காரணமாக உள்ளது. 

எனவே, மைய, மாநில அரசுகள் வழக்கம்போல் மெத்தனம் காட்டாமல் விரைந்து இச்சிக்கலில் தலையிட வேண்டும். மரண தண்டனையிலிருந்து தமிழக மீனவர்கள் அய்வரையும் காப்பாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதோடு, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நவம்பர் 5ஆம் நாள் எனது (தொல்.திருமாவளவன்) தலைமையில் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்..  

இவண்
தொல்.திருமாவளவன்