பாம்பாற்றின் குறுக்கே அணை தடுத்து நிறுத்த இந்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை

பாம்பாற்றின் குறுக்கே அணை

தடுத்து நிறுத்த இந்திய அரசுக்கு
விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை

தொல்.திருமாவளவன் அறிக்கை

காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இறுதித் தீர்ப்பை மீறும் வகையில் கேரள அரசு பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.  அண்மையில், கேரள முதல்வர் உம்மன்சாண்டி அவர்கள் ரூபாய் 26 கோடி மதிப்பீட்டில் இந்த அணையைக் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளார்.  2 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இந்த அணையை பட்டிச்சேரி என்னுமிடத்தில் கட்டுவதற்கான தொடக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.  

இந்த அணை கட்டப்படுமேயானால் காவிரி ஆற்றின் துணை நதியான அமராவதி நதியில் கட்டப்பட்டுள்ள அணைக்கு வரும் நீரின் அளவு தடைப்படும் என்றும், அதிலிருந்து பாசன வசதி மற்றும் குடிநீர் வசதி பெறும் பகுதிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்படும் என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

மேலும், கேரள அரசு காவிரி மேலாண்மை வாரியத்தின் ஒப்புதல் இல்லாமலும், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமலும் எந்த ஒரு புதிய திட்டத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்பது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.  ஆனால், கேரள அரசு நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.  அத்துடன், மைய அரசும் இதுவரையில் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையத்தையும் இன்னும் நியமிக்கவில்லை என்பது வேதனைக்குரியது.  காவிரி மேலாண்மை வாரியம் நியமிக்கப்படாததால் கேரள அரசு துணிச்சலாக இப்புதிய திட்டத்தை மேற்கொள்கிறது என்பதை இந்திய அரசுக்குச் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.  

எனவே, பாம்பாற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு மேற்கொள்ளும் இந்த முயற்சியைத் தடுப்பதற்கு உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையத்தையும் நியமித்திட வேண்டும் என இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.  அத்துடன், இரு மாநிலங்களுக்கிடையில் இதனால் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் தடுப்பதற்கு உடனடியாக இந்திய அரசு கேரள அரசுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.  அதாவது, பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இது தொடர்பாக தமிழக அரசு நேரடியாக இந்தியத் தலைமை அமைச்சரைச் சந்தித்து முறையிட வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.


இவண்
தொல்.திருமாவளவன்