மானிய விலையில் நாப்தா வழங்க வேண்டும் இந்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள்தமிழகத்தில் இயங்கிவரும் சென்னை உர ஆலை, தூத்துக்குடி ஸ்பிக் உர ஆலை மற்றும் கர்நாடகாவில் இயங்கிவரும் மங்களூர் உர ஆலை ஆகிய முன்று உர ஆலைகளிலும் தற்போது இயற்கை எரிவாயு திரவத்தை (என்.எல்.ஜி.) கொண்டு உரம் தயாரிக்க வேண்டுமென இந்திய அரசு அறிவித்துள்ளது.  ஏற்கனவே இந்தியாவில் பிற மாநிலங்களில் இயங்கிவரும் உர ஆலைகள் இயற்கை எரிவாயு திரவத்தையே மூலப் பொருட்களாகக் கொண்டு உரம் தயாரித்து வருகின்றன என்றாலும் தென்னிந்தியாவில் இயங்கிவரும் மேற்கண்ட இம்மூன்று உர ஆலைகள் மட்டும் நாப்தாவை மூலப் பொருளாகக் கொண்டு உரம் தயாரித்து வருகின்றன.  இவை ஆண்டுக்கு 15 இலட்சம் டன்களுக்கு மேலாக யூரியா என்னும் உரத்தைத் தயாரித்து வருகின்றன.  இந்த உற்பத்தி தென்னிந்திய மாநிலங்களில் உள்ள விவசாயிகளின் தேவைகளை நிறைவு செய்வதாக உள்ளது.  

இந்நிலையில் திடீரென கடந்த அக்டோபர் மாதம் முதல் இந்த ஆலைகளிலிருந்து உர உற்பத்தியை நிறுத்தியுள்ளது.  இதனால் 15,000க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. உர உற்பத்தியை திடீரென நிறுத்தி மீண்டும் உற்பத்தியைத் தொடங்குகிறபோது ஒவ்வோர் ஆலைக்கும் ரூபாய் 15 கோடி செலவாகும் எனத் தெரிய வருகிறது.

அத்துடன், குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த ஆலைகளை மட்டும் தொடங்கவில்லையெனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் பழுதடைந்து ஆலையை இயக்க முடியாத சூழல் உருவாகும்.  இத்தகைய விரயங்களைத் தவிர்ப்பதற்கு இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  குறிப்பாக, சென்னை உரஆலை உள்ளிட்ட மூன்று ஆலைகளுக்கு இயற்கை எரிவாயு திரவத்தைக் கொண்டுவருவதற்கான கட்டமைப்பு வசதிகள் இன்னும் அமைக்கப்படவில்லை.  இந்நிலையில், உர ஆலைகளை உற்பத்தி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி வைப்பது விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, இந்திய அரசு இந்தியாவில் பிற மாநிலங்களில் இயங்கும் உர ஆலைகளுக்கு மானிய விலையில் எரிவாயு திரவத்தை வழங்குவதைப் போல, இந்த மூன்று ஆலைகளுக்கும் நாப்தாவை மானிய விலைக்கு வழங்கி தொடர்ந்து இயங்குவதற்கு இந்திய அரசு அனுமதிக்க வேண்டுமென்றும், இயற்கை எரிவாயு திரவத்தைப் பயன்படுத்துவதற்கான உள் கட்டமைப்பு வசதிகளை முழுமையாக உருவாக்கிய பின்னர் நாப்தாவை மூலப் பொருட்களாகப் பயன்படுத்தும் முறையைக் கைவிடுவதற்கு இந்திய அரசு அனுமதிக்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இவண்

தொல்.திருமாவளவன்