காவிரி ஆற்றின் குறுக்கே அணைகள் கட்ட முயற்சி: கேரள, கர்நாடக அரசுகளின் தமிழக விரோத நடவடிக்கைகளைக் கண்டிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும்! தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை

கர்நாடக மாநில அரசு காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டு புதிய அணைகளைக் கட்டுவதற்கு முயற்சிப்பதாகத் தெரிய வருகிறது.  கர்நாடக மாநில நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி. பாட்டில் இது குறித்து அறிவிப்புச் செய்திருக்கிறார்.  பெங்களூரு, மைசூரு ஆகிய பெரு நகரங்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றுவதற்காக இவ்விரு அணைகளையும் கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாகவும், தமிழகம் எதிர்த்தாலும் இந்த அணையைக் கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை மீறுகின்ற செயலாகும்.   கர்நாடக அரசின் முயற்சியினைத் தடுத்து நிறுத்திட விரைவான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.  ஒரு புறம் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு கேரள அரசும், இன்னொரு புறம் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசும் முயற்சித்து வருகின்றன.  இதனால் தமிழகம் வெகுவாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.  குடிநீர், விவசாயம் ஆகியவற்றிற்குப் போதிய நீர்வளம் இன்றி தமிழகம் பாலைவனமாகும் நிலை ஏற்படும்.

எனவே கேரள மற்றும் கர்நாடக அரசுகளின் சட்டத்துக்குப் புறம்பான, தமிழக விரோத நடவடிக்கைகளைக் கண்டிக்கவும், மைய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல ஏதுவான வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு உடனே கூட்ட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்