விடுதலை சிறுத்தைகள் கட்சி ஜாதிக்கான இயக்கம் அல்ல


விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி புரட்சியாளர் சிலையை திறந்து வைத்தார்.
விழாவில் எழுச்சித்தலைவர் திருமாவளவன் பேசியதாவது:–
கடலூர் மாவட்டத்திலேயே முதன் முதலில் நிறுவப்படுகின்ற முதல் வெண்கல சிலை விருத்தாசலத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மற்ற இடங்களில் உள்ள அனைத்து சிலைகளும் வெண்கல சிலைகளாக மாற்ற நமது நிர்வாகிகள் முன்வருவார்கள் என நான் நம்புகிறேன், நெய்வேலியில் வெண்கலத்தால் ஆன அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நெய்வேலியை நாம் சேர்த்துக்கொள்ள முடியவில்லை. அது ஒரு தனி பிரதேசமாக உள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்குமான தலைவர் அம்பேத்கர். இதை மக்கள் புரிந்து கொள்ள இன்னும் பல ஆண்டுகள் தேவைபடும். 50 ஆண்டுகளுக்கு முன்பு அவரை ஒரு சராசரி தலைவராகதான் எல்லோரும் பார்த்தார்கள். 1991–ல் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது ராம்விலாஸ் பஸ்வான் அமைச்சராக இருந்த காலத்தில்தான் அம்பேத்காரின் சிந்தனைகளை, பேச்சுகளை, எழுத்துகளை இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம் செய்ய ஆணை பிறப்பித்தார். அதன் பிறகுதான் அவர் இந்திய அளவில், உலக அளவில் போற்றக்கூடிய தலைவராக அறியப்பட்டார்.
இந்தியாவில் தமிழகத்தில் தான் 69 சதவீத இட ஒதுக்கீடு இருந்து வருகிறது. இதில் அகில இந்திய அளவில் கல்வி, வேலைவாய்ப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை தாண்டக்கூடாது என்ற உச்சநீதிமன்றம் தற்போது தீர்ப்பு அளித்துள்ளது. தமிழகத்தில் 69 சதவீதம் என்பது தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மக்களுக்கு 19 சதவீதம், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவீதம் என்கிற நிலையில் இருந்து வருகிறது. இவை எந்த அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. இதை பாதுகாக்கும் வகையில் அனைத்து கட்சியினர் கூடி ஆலோசித்தோம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி என்பது தலித் அல்லாத மக்களுக்கு எதிராக சிந்தித்தும் இல்லை, யாரையும் பகையாகவும் பார்த்ததும் இல்லை. எந்த ஒரு சமுதாயத்திற்கும் நாங்கள் தீங்கு விளைவித்தது இல்லை. இது சாதிக்கான இயக்கமும் அல்ல. ஒடுக்கப்பட்ட அனைவருக்குமான இயக்கம், யாருக்காவும் போராடக்கூடியது. டாக்டர் அம்பேத்கர் வழியில் போராடி வரும் கட்சியான விடுதலை சிறுத்தைகள் அனைவரிடத்திலும் நல்லிணக்கம் பெற்றுள்ளது
நெய்வேலி என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 28 நாட்களை கடந்து கோரிக்கைகளை நிறைவேற்றகோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களது போராட்டத்திற்கு என்றென்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை நிற்கும், எனவே அவர்களை வரவேற்று ஆதரிப்பதுடன் அவர்களது போராட்டம் வெல்வதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.