விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தை இந்திய அரசும் பின்பற்ற வேண்டும்!

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்
ஐரோப்பிய ஒன்றியத்தை இந்திய அரசும் பின்பற்ற வேண்டும்!
தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிபதிகள் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கி, சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர். 2006ஆம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் மீது விதித்திருந்த தடையைத் தற்போது விலக்கிக் கொண்டிருக்கிற ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம், இந்திய அரசின் நடவடிக்கைகளையும் விமர்சித்துள்ளது. இந்திய அரசு, இலங்கை பிரச்சினையில், ஒரு சார்பான அணுகுமுறைகளைக் கொண்டிருக்கிறது என்றும், எனவே, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அரசு முன்வைக்கும் கருத்துகளில் நம்பிக்கை இல்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிபதிகள் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் மீது சிங்கள அரசும், இந்திய அரசும் எவ்வாறு அவதூறுகளைப் பரப்பிவந்துள்ளன என்பதை இதிலிருந்து சர்வதேச சமூகத்தால் அறிந்துகொள்ள முடியும். 

சிங்கள இனவெறியர்களின் கைகளில் ஆட்சியதிகாரம் இருப்பதால், மிக இலகுவாக சர்வதேச நாடுகளின் ஆட்சியாளர்களை அணுகி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான அவதூறுகளைப் பரப்ப முடிகிறது. ஒரு தரப்பு கருத்துக்களை மட்டுமே கேட்கிற வாய்ப்பைப்பெற்ற நாடுகள், அவற்றை உண்மையென நம்பி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான முடிவெடுக்கும் நிலையும் உருவாகிறது. 

சிங்கள அரசுக்குத் துணையாக இந்திய அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிரான அவதூறுகளைப் பரப்பி சர்வதேச நாடுகளை நம்ப வைத்துள்ளது. அதனடிப்படையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் விடுதலைப் புலிகள் மீது தடைவிதித்திருந்தது. தற்போது, சட்டபூர்வமாக விசாரணை நடத்தியதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிபதிகள் அக்கருத்தை மாற்றிக்கொண்டு, புலிகள் மீதான தடையை விலக்கிக் கொண்டுள்ளனர். இது சர்வதேச சமூகத்தின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன், புலிகளின் மீது ஒரு புதிய பார்வையை ஏற்படுத்தும் என்றும் நம்புகிறோம். ஐரோப்பிய ஒன்றியத்தைப் பின்பற்றி பிற நாடுகளும் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் நிலை உருவாகும். அந்த வரிசையில், இந்திய அரசும் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டுமென்றும் புலிகளின்மீதான தடையை விலக்கிக் கொள்ள வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் இந்திய ஆட்சியாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. அத்துடன், விடுதலைப் புலிகள் இயக்கம் வெகுமக்களின் பேராதரவு பெற்ற ஒரு தேசிய இன விடுதலைப் போராட்ட இயக்கம் எனவும் இந்திய அரசு அங்கீகரித்து ஏற்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.              

இவண்
தொல்.திருமாவளவன்