நோக்கியா நிறுவனத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்! தொல்.திருமாவளவன் கோரிக்கை!

நோக்கியா நிறுவனத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்!

தொல்.திருமாவளவன் கோரிக்கை!
 திருப்பெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா நிறுவனத்தை மூடுவதற்கு அதன் நிர்வாகம் முடிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.  அந்நிறுவனத்தில் பணியாற்றிவரும் சுமார் 13,000 தொழிலாளர்கள் வேலை இழந்து நடுத்தெருவில் நிற்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  அந்நிறுவனத்திற்காக உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் துணை நிறுவனங்களும் அதன் தொழிலாளர்களும் இதனால் பாதிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தை மூடுவதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட வேண்டிய சிக்கலும் இதனால் உருவாகியுள்ளது.  எனவே, நோக்கியா நிறுவனத்தை மைய அரசு அல்லது மாநில அரசு கையகப்படுத்தி தொடர்ந்து நடத்துவதற்கு முன்வர வேண்டும்.  

நோக்கியா நிறுவனத்தை மூடுவதற்கு நிர்வாகத் தரப்பினர் கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை.  பல ஆண்டுகளுக்கு முன்பே இந்நிறுவனத்தை மூடுவதற்கு நிர்வாகத் தரப்பில் திட்டமிட்டு வந்துள்ளனர் என்பதும் அவர்களின் கடந்த கால நடவடிக்கைகளிலிருந்து அறிய முடிகிறது. சுமார் 7,000 நிரந்தரப் பணியாளர்களைக் கட்டாய விருப்ப ஓய்வில் வெளியேற்றி இருக்கிறார்கள்.  அரசுக்குச் செலுத்த வேண்டிய பல்லாயிரம் கோடி வரி பாக்கியைத் திட்டமிட்டே நிலுவையில் வைத்துள்ளனர் என்றும் தெரிய வருகிறது.  அதாவது, ஏதோ உள்நோக்கத்தோடு நலிவடைந்த நிறுவனமாகக் காட்டி அதனை மூடுவதற்கு அவர்கள் முயற்சித்திருப்பதை ஊகிக்க முடிகிறது. 

இந்நிலையில் பாதிக்கப்படும் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மைய, மாநில அரசுகள் உடனடியாக இதில் தலையிட வேண்டும் என்பதுடன் அதனை அரசே ஏற்று நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.


இவண்
தொல்.திருமாவளவன்