பால் விலை ஏற்றத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!

பால் விலை ஏற்றத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!
தொல்.திருமாவளவன் கோரிக்கைதமிழக அரசு இன்று திடீரென பால் விலையை உயர்த்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.   மக்களின் அடிப்படையான உணவுப் பொருட்களில் ஒன்றான பால் உணவுப் பொருளாக மட்டுமல்லாமல் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  ஏற்கனவே இந்த அரசு கடந்த முறை பால் விலையை உயர்த்திய பொழுது மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர்.  குறிப்பாக குறைந்த வருவாயில் குடும்பம் நடத்துவோருக்கு இது மிகப் பெரிய நெருக்கடியாகும்.  

கொள்முதல் விலையை விட விற்பனை விலை அதிகமாக உள்ளதை மக்கள் எப்படித் தாங்கிக் கொள்வார்கள்.  பால் விலை உயர்வு என்பது சமூகத்தில் ஏழை எளிய நடுத்தர மக்களைப் பெரிதும் பாதிப்படையச் செய்யும் செயல்.  பால் விலை உயர்வுக்கு அரசு பல காரணங்களைச் சொல்கிறது என்றாலும் அவை ஏற்புடையன அல்ல.  மாட்டுத் தீவனங்களின் விலை ஏறி விட்டதால் பால் உற்பத்தியாளர்கள் பால் விலையை உயர்த்த வேண்டுமெனக் கோரிக்கை வைத்ததாக தமிழக முதல்வர் கூறும் கருத்து நகைப்புக்குரியதாக உள்ளது. 

ஆவின் நிறுவனத்தில் நடக்கும் முறைகேடுகளைக் களைந்தாலே பால் விலையை உயர்த்த வேண்டிய தேவை இருக்காது.  எனவே தமிழக அரசு உடனடியாக பால் விலை ஏற்றத்தை திரும்பப் பெற வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதுடன், அரசு மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்கள், காப்பகங்கள் ஆகியவற்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையை விட குறைந்த விலையிலேயே பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக் கொள்கிறது.

இவண்

தொல்.திருமாவளவன்