சாதியவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்கள், சொத்துகளை அரசுடைமையாக்க வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

பீகார் முதலமைச்சருக்கே தீண்டாமைக்கொடுமைகள்:
தீண்டாமைக்கு எதிரான 
தீவிர தேசிய இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும்

தொல்.திருமாவளவன் அறிக்கை!

பீகார் மாநிலத்தில் தீண்டாமைக்கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன என்பதற்குச் சான்றாக பீகார் முதலமைச்சர் ஜிதன் ராம்மஞ்ஜி விளங்குகிறார். அவர், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, தனக்கு நேர்ந்த அவமானத்தைக் குறிப்பிட்டு வேதனைப்பட்டிருக்கிறார். அதாவது, பீகார் மாநிலத்தில் அண்மையில் நடந்த இடைத்தேர்தலில்போது மதுபானி மாவட்டத்தில் ஒரு கோவிலுக்குச் சென்றதாகவும் கோவிலைவிட்டு அவர் வெளியேறிய பின்னர் அந்தக் கோவிலின் நிர்வாகத்தினர் கோவிலைக் கழுவி சுத்தம் செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவில் சாதி எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஒரு முதலமைச்சருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்கள் கிராமப்புறங்களில் எத்தகைய சாதிக் கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சில கோவில்களில் மட்டும்தான் அனைத்துத் தரப்பினரும் வழிபாடு செய்யமுடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது. அதுவும் பெருநகரங்களில் மட்டும்தான் இந்த மாற்றத்தைக் காணமுடிகிறது.  நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் உள்ள பெரும்பான்மையான கோவில்கள் சாதியவாதிகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்கிவருகின்றன. அக்கோவில்களுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையவே முடியாத நிலை உள்ளது. கோவில் விழாக்களில்கூட தலித்துகள் கலந்துகொள்ளவும் முடியாத அளவுக்கு சாதிக் கொடுமைகள் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நிலவுகின்றன. 

பீகார் முதலமைச்சர் தனக்கு நேர்ந்த அவமானத்தைச் சில மாதங்கள் கழித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அதனால், தற்போது இது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஆனால், அன்றாடம் கிராமப் புறங்களில் நடக்கும் குறிப்பாக, கோவில்களில் நடக்கும் தீண்டாமைக் கொடுமைகள் வெளிச்சத்திற்கு வருவதேயில்லை. இந்திய நாடு விடுதலை பெற்று சுமார் 67 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையிலும் சாதிக் கொடுமைகளை இன்னும் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதே வெட்கக்கேடான ஒன்றாகும். ஊழலுக்கு எதிராகவும் வறுமைக்கு எதிராகவும் போராடும் மனித உரிமை ஆர்வலர்கள், பிற சனநாயகச் சக்திகள் சாதிக்கொடுமைகளுக்கு எதிராகப் போராடத் தயங்குவது ஏனென்று விளங்கவில்லை. 

சாதியத்திற்கு எதிராகவும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும் சனநாயகச் சக்திகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும். மைய, மாநில அரசுகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தவேண்டும். இந்தியாவில் சாதியவாதிகளின் பிடியில் உள்ள கோவில்கள் அனைத்தையும் அரசுடைமையாக்க வேண்டும். கோவில் மட்டுமின்றி கோவில் சொத்துக்கள் யாவற்றையும் அரசுடைமை ஆக்குவது கோவில்களில் சாதிக் கொடுமைகளைக் கட்டுப்படுத்துவதற்கு வழிவகுக்கும். 

எனவே, மைய, மாநில அரசுகள் பீகார் முதல்வருக்கு நேர்ந்த தீண்டாமைக் கொடுமையை கவனத்தில்கொண்டு தீண்டாமைக்கு எதிரான தீவிர தேசிய இயக்கத்தை மேற்கொள்ளவேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது. பீகார் முதல்வருக்கு எதிரான தீண்டாமைப்போக்கை கடைப்பிடித்த சாதியவாதிகளை விடுதலைச்சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.  

இவண்
தொல்.திருமாவளவன்