என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆண்டுக்கு 1500 கோடிக்கு மேல் இலாபம் ஈட்டுகிற நிறுவனமாக இயங்கி வருகிறது.   'மினி ரத்னா', 'நவரத்னா' எனும் தகுதிகளைப் பெற்று வளர்ச்சியடைந்துள்ள இந்நிறுவனத்தில் சுமார் 13,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்திற்கு நீண்ட காலமாகப் பணியாற்றி வருகின்றனர்.  இவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  ஆனால், என்.எல்.சி. நிறுவனம் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கையினைத் தொடர்ந்து புறந்தள்ளி வருகிறது.

இந்நிலையில், கடந்த 3-9-2014 முதல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, போனஸ் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனைத் தொடர்ந்து தொழிற்சங்கத் தலைவர்களுடன் நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை.  ஒப்பந்தத் தொழிலாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதால் நிர்வாகம் எந்த வகையிலும் நலிவடைவதற்கு வாய்ப்பில்லை.  ஆனால், இந்திய அரசும், என்.எல்.சி. நிர்வாகமும் இதில் தொடர்ந்து அடம்பிடிப்பது ஏனென்று விளங்கவில்லை.

கடந்த 1991க்குப் பிறகு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டனவே தவிர புதிதாக தொழிலாளர்கள் பணியமர்த்தல் நிகழவேயில்லை.  1991க்குப் பிறகு ஆண்டு தோறும் பணி ஓய்வின் மூலம் நூற்றுக்கணக்கான நிரந்தரத் தொழிலாளர்கள் வெளியேறுவதால் ஏற்படும் பணிச் சுமை இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் உழைப்பின் மூலமே ஈடு செய்யப்படுகிறது.  கூடுதல் நேரம், கூடுதல் பணி என உழைத்தாலும் அவர்களுக்கு வழங்கப்படுகிற ஊதியம் மிகக் குறைவானதே ஆகும். 

எனவே, ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை என்.எல்.சி. நிர்வாகம் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்.  கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ளதைப் போல ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான ஊதியக் குழுவினை உடனே அமைத்திட வேண்டும்.  அக்குழுவின் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரச்சனைகளை உரிய காலக்கெடுவில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும்.  அதுவரையில் இடைக்காலமாக அவர்களுக்கான ஊதியத்தை ரூபாய் இருபத்தைந்தாயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டுமென என்.எல்.சி. நிர்வாகத்தையும் இந்திய அரசையும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

ஏற்கனவே கடுமையான மின்வெட்டுச் சிக்கலால் தமிழகம் பாதிக்கப்பட்டுவரும் சூழலில் என்.எல்.சி. நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டம் தொடருமேயானால் மேலும் கடுமையான மின்வெட்டுப் பாதிப்பு உருவாகும்.  எனவே என்.எல்.சி. நிர்வாகமும் இந்திய அரசும் இதில் மெத்தனம் காட்டாமல் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முன்வர வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்