சாராயக் கடைகளை அரசு நடத்துகிறது.. கல்லூரிகளை வணிகர்கள் நடத்துகிறார்கள்

திருமாவளவனின் 53-வது பிறந்த நாளான ஆகஸ்ட் 17-ம் தேதி, சேலத்தில் கல்வி உரிமை மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அனுமதி மறுப்பு, 144 தடை உத்தரவு, வெளியூர்களில் இருந்து மாநாட்டுக்கு வாடகை வாகனங்களில் வருவதற்குத் தடை... என அடுத்தடுத்து சேலம் மாவட்ட நிர்வாகம் மாநாட்டை முடக்கப் பார்த்தாலும், நீதிமன்ற உதவியோடு மாநாட்டை நடத்திக்காட்டியிருக்கிறார் திருமாவளவன். அவர் படித்த சென்னை பல்கலைக்கழகத்தின் முகப்புத் தோற்றத்தை மாநாட்டு மேடையாக உருவாக்கியிருந்தனர். மாநாட்டில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தெலங்கானாவில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரி முதல்வர் வினோத்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முதலில் பேசிய சுப.வீரபாண்டியன்,        '' 'தமிழ் என்பது சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்த மொழியல்ல. அது திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி’ என்று கால்டுவெல் சொன்னார். அவர் சொல்வதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே, அந்தச் செய்தியை உலகத்துக்குச் சொன்னவன் ஒரு வெள்ளைக்காரன். அவனது பெயர் எல்லீஸ். தனது பெயரை எல்லீசன் என்று மாற்றிக்கொள்ளும் அளவுக்குத் தமிழ் மீது பற்றுவைத்திருந்தவன்.
பழைய ஓலைச்சுவடிகள் எல்லாம் அவருக்கு வந்து சேர்ந்தன. அதில் பயன்படாத ஓலைச்சுவடிகளை எரிப்பதற்குக் கொடுத்தார்கள். அதை  எரித்துக்கொண்டிருக்கும்போது, சில சுவடிகளை அவருடைய சமையல்காரர் கந்தப்பன் படித்தார். அந்தச் சுவடிகளில் இருக்கிற கருத்து அவர் நெஞ்சத்தின் ஆழத்தைத் தொட்டது. அவர் எல்லீஸிடம் போய் இந்த ஓலைச் சுவடிகள் எல்லாம் அரிய கருத்துக்களைச் சொல்லுவதுபோல் இருக்கிறது என்று சொன்னார். எல்லீஸ் தமிழறிந்த அறிஞர்களைக்கொண்டு அதை ஆராய்ச்சி செய்தார். அந்த ஓலைச்சுவடிகள் எதைத் தாங்கியிருந்தன தெரியுமா? திருக்குறளை. திருக்குறளை நெருப்புக்குப் போய்விடாமல் காத்த கந்தப்பன் யார் தெரியுமா? ஒரு தலித்!'' என்று முடித்தார்.
அடுத்ததாகப் பேசிய விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன், ''நம்முடைய மாநாட்டுக்கு தடைக்கு மேல் தடை விதிக்கிறார்கள். சிறுத்தைகள் 'தாண்டுவதற்கு’ தடைதான் முக்கியம். காவல் துறையின் அடக்குமுறைகளைத் தாண்டி இன்று இங்கு மாநாடு நடத்திக்கொண்டிருக்கிறோம். அதுவும் கல்வி உரிமைக்கான மாநாடு. வரலாறு பல பொய்கைளை நம்மிடம் விதைத்திருக்கிறது. இந்தப் பொய்கள்தான் அதிகாரத்தைத் தாங்கிக்கொண்டிருக்கின்றன. அதிகாரம் ஆயுதங்களால் மட்டுமல்ல; பொய்களாலும் தாங்கி நிறுத்தப்படுகிறது. அரசும் அதிகார வர்க்கமும் நம்முன்னே பல பொய்களைத் திணித்திருக்கிறார்கள். நாம் எல்லோரும் அறிவில்லாதவர்கள், காட்டுமிராண்டிகள் என்ற கருத்தைத் திணித்தார்கள். நாம் எல்லாம் அறிவுக்குடிகள், மெய்யறிவாளர்கள், திருவள்ளுவரின் வாரிசுகள். அறிவும் தமிழும் நம்மிடம் இருந்து களவாடப்பட்டன. நம்முடைய நிலமும் அதிகாரமும் நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டன. பறிக்கப்பட்ட நிலத்தை, அதிகாரத்தை, அறிவை மீட்டெடுக்கிற களம்தான் இந்தக் கல்வி உரிமை மாநாடு'' என்றார்.
இறுதியாக பேசிய திருமாவளவன், ''இது நம்முடைய அடுத்த தலைமுறைக்கான போராட்டம். கல்வியைக் கொடு என்று சொல்கிற  மாநாடு. விடுதலைச் சிறுத்தைகள் என்ன சாதி கட்சியா..? இது உலகில் உள்ள ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கட்சி.
தஞ்சாவூரிலும் மதுரையிலும் நாமக்கல்லிலும் வாகனங்களுக்குத் தடைபோடுகிறார்கள். கேட்டால், சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு போட்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள். சேலம் மாவட்ட ஆட்சியர் என்ன தமிழக முதலமைச்சரா? 'நீங்கள் மாவட்ட மாநாடு நடத்திக்கொள்ளுங்கள்’ என்று சொல்கிறது காவல் துறை. ஒரு அரசியல் கட்சி மாவட்ட மாநாடு நடத்த வேண்டுமா, இல்லை மாநில மாநாடு நடத்த வேண்டுமா, இல்லை ஒன்றிய மாநாடு நடத்த வேண்டுமா என்று காவல் துறையா முடிவு செய்ய வேண்டும்? காவல் துறையின் அடக்குமுறைக்கு நான் அடங்கிப்போயிருந்தால் இந்த மாநாட்டை நடத்தியிருக்க முடியுமா? நீதிமன்றத்தில் போராடி வெற்றி கண்டிருக்கிறோம்.
மாடு மேய்த்துக்கொண்டிருந்த ராமசாமியின் மகன் திருமாவளவன் படிக்காமல் இருந்திருந்தால் இதை செய்திருக்க முடியுமா? இன்று முழுக்கால் சட்டை போட்டுக்கொண்டு மீசையை முறுக்கிவிட்டு உங்கள் முன்னால் நிற்கமுடியுமா? ஆக, படிப்பு ஒன்றுதான் நமக்கு ஆயுதம். சாராயக் கடைகளை அரசாங்கம் நடத்திக்கொண்டு, கல்வியை வணிகக் கொள்ளையர்களிடம் ஒப்படைத்திருக்கிறது. அந்த நிலைமை மாற வேண்டும். ஆரம்பப் பள்ளி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை இலவசமாக்கப்பட வேண்டும். தமிழ்வழிக் கல்வி குறைந்தது 12-ம் வகுப்பு வரைக்குமாவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்'' என்று முடித்தார்.
எம்.புண்ணியமூர்த்தி, கு.ஆனந்தராஜ்
படங்கள்: எம்.விஜயகுமார்
நன்றி : ஜீனியர் விகடன் 24.08.204