கல்வி உரிமை மாநாடு ஒரு சாதிக்கானது அல்லஓர் இயக்கம் தேர்தலில் வெற்றி பெறுவது என்பதைவிட அது தன் கொள்கையில் எப்படி வெல்கிறது என்பதுதான் மிக முக்கியம். சமூக விடுதலைக்கான, சமூக சமநிலைக்கான கொள்கையோடு ஓர் இயக்கத்தை நடத்துவது என்பது மிகவும் அரிதானது. புரட்சியாளர் அம்பேத்கர் தந்தைபெரியார் போன்றவர்களால் சாத்தியப்பட்ட அந்தப் பணி தற்காலச் சமூக சூழலில் சாத்தியம் இல்லாமல் இருக்கிறது, அப்போது படித்தவர்கள் மிகவும் குறைவாக இருந்தார்கள். அவர்கள் நல்லவற்றைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாக இருந்தார்கள். ஆகவே பலரின் கருத்துக்களைக் கேட்கக் கூடியவர்களாக அவற்றில் இருக்கும் நல்லவற்றை உள்வாங்கிக்கொள்பவர்களாக இருந்தார்கள். அதனால் மேற்கண்ட தலைவர்கள் சொன்ன கருத்துக்கள் மக்களை ஊடகங்கள் இல்லாமலேயே மிகவும் எளிதாக அடைந்து பரவலாக்கப்பட்டு இயக்கமாக அது மாறி இன்றைய சமூக வாழ்வியலை உருவாக்கியுள்ளது.


உருவாக்கப்பட்ட சமூக வாழ்வியலில் ஏற்பட்ட உலகளாவிய மாற்றங்களால் வாழ்க்கையில் துய்த்தல் ஒன்றுதான் நோக்கம் என்று நினைக்கும் மத்திய நடுத்தர வர்க்கம் உருவாகி, எந்தக் கொள்கைகளால் இத்தகைய வாழ்வியலைப் பெற்றோமோ அதை மறந்து அல்லது அதைக் கற்றுக்கொள்ளாமல், நுகர்வின் நுகத்தடியை தங்கள் கழுத்துகளில் சுமந்து கொண்டு துய்ப்பதற்காக வாழ்வது, அப்படி வாழ்வதற்காகப் படிப்பது, படித்து முடித்தபிறது நுகர்வின் கலாச்சாரத்தில் வசதிமிக்க வாழ்கையை அடைவது என்ற விழுமியம் மிகவும் அதிகரித்து அடுத்தவரைப் பற்றிக் கவலைப்படாமல் வாழக்கூடிய சமூக அமைப்பு இப்போது உருவாகி இருக்கிறது.

இவற்றைத் தாண்டி சாதிய சிக்கல்கள். மாறிவரும் நுகர்வுக் கலாச்சாரத்தில் அழியாமல் இருக்கக் கூடியதாக மேலும் வலுபெற்றதாக சாதி அமைப்புகள் மாறிவருகின்றன. என்னதான் உலகளாவிய மானுட வசதிகளைப் பெற்றிருந்தாலும் அறிவியல், வரலாறு , அறவியல், மானுடவியல் படித்திருந்தாலும், பொருளாதாரத்தில் சமநிலை இருந்தாலும், பதவிகள் சமமாக இருந்தாலும், தனக்குக் கீழான சாதி ஒன்று வேண்டும் என்ற ஆதிக்க மனநிலை இன்றைக்கு அதிகமாகி இருக்கிறது. மேட்டை வெட்டிப் பள்ளத்தை நிரப்ப வேண்டிய இயற்கை நியதிக்கு மாறாக இந்திய சாதிய உளவியல் பள்ளத்தைப் பெரும்பள்ளமாகவே பார்க்கிறது என்பது எத்தகைய அபத்தம். அறிவின் வெள்ளம் பாய்ந்தோடும் இந்தக் காலத்திலும் சாதி என்னும் திமிரும், தான் உயர்ந்தவன் என்னும் ஆதிக்க மனநிலையும் எத்தகைய மோசமானது என உணரவில்லை என்றால் அவர்கள் பெற்ற கல்வியினாலும் பார்க்கும் பணியினாலும் எந்தப் பயனும் இல்லை.

சாதிய உளவியலைக் கட்டிக்காக்கும் இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால் கல்வி மட்டுந்தான் ஆகச்சிறந்த மருந்து. இன்றைக்கு அந்தக் கல்வி கடைச்சரக்காகிப் போயிருக்கிறது. அரசியல்வாதிகள் கல்வித்தந்தைகளாகவும் மாறிவிடுகின்றனர். சாதாரணா ஏழை மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நல்ல கல்வியை காசு கொடுப்பவர்களுக்குத் தான் தர முடியும் என்ற நிலை இருக்கிறது. இதனால் தனியார் பள்ளிகள் உப்பிக் கொண்டிருக்கின்றன. அருகாமையில் இருக்கும் ஆங்கிலப்பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்படுவதால் அங்கிருக்கும் அரசுப்பள்ளிகள் காலியாக இருக்கின்றன. அரசுப்பள்ளிகளில் தரமானக் கல்வி தருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இருந்தாலும் தனியார்ப் பள்ளிகளின் விளம்பரங்களும் ஆங்கில மோகமும் இன்றைக்குக் கல்வியை வணிகப் பொருளாக மாற்றியிருக்கின்றன.இதனால் ஏழைகளுக்கு கல்வி தரமானதாகக் கிடைக்கவில்லை.

தனியார் கல்வி நிறுவனங்களில் படித்தால்தான் மருத்துவ படிப்பும் உயர்படிப்பும் கிட்டும் என்னும் நிலை வந்தபின்பு அரசுப்பள்ளிகளில் எப்படி மாணவர்கள் படிப்பார்கள். அரசுப் பள்ளிகளை மூடவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. 2000 ம் பள்ளிகளை அருகாமைப் பள்ளிக்கூடங்களோடு இணைக்கப்போவதாகச் செய்திகள் வருகின்றன. அரசுப் பள்ளிகளை மூடிவிட்டால் ஏழைக்குழந்தைகளுக்குக் கல்வி எட்டாக் கனியாகிவிடும் சூழ்நிலை நிலவுகிறது.

இதற்கு ஒரே தீர்வு கல்வியை சமனாக்குவது. வேறுபாடற்ற கல்வி முறையால்தான் வேறுபாடற்ற சமூகத்தை உருவாக்க முடியும். ஆகவே கல்வியை கடைச்சரக்காக மாற்றும் பெரு முதலாளியப் போக்கிலிருந்து கல்வியை இலவசமாக்க வேண்டும் என்னும் தேவை இப்போது மிகவும் முக்கியமானது. இது சாதிகளைக் கடந்தது. அனைத்து மக்களுக்குமானது.

ஆரம்பக் கல்வியிலிருந்து ஆராய்ச்சிக் கல்வி வரை மக்களுக்கு அரசு இலவசமாகத் தரவேண்டும் என்னும் கோரிக்கை வேறு எவரைவிடவும் மக்களுக்கானது. இத்தகைய கோரிக்கை அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது. அதை யார் வைக்கிறார்கள் என்ற கேள்விக்கு அப்பாற்பட்டது. அதனுடை பயன் யாரைப் போய்ச் சேரும் என்னும் பயன்பாட்டு வாதம் மிகவும் முக்கியமானது.

கல்வியை இலவசமாக்கு எனக் கோரும் ஒரு மாநாட்டை தமிழ் நாட்டில் ஓர் அரசியல் கட்சி நடத்துகிறது. அக்கட்சியின் தலைமை ஆகச்சிறந்த ஆற்றல் பெற்ற ஒருவர். சமகாலத்தின் எல்லாப் பிரச்சினைகளிலும் கருத்துச் சொல்லக்கூடிய ஒருவர். காசாவின்மீது தாக்குதலைக் கண்டிப்பவர். ஈழத்தமிழருக்காகப் பேசுபவர். தமிழர்கள் தேசியத்திற்காகப் போராடுபவர். சாதி ஒழிப்பே சமூக விடுதலை என்று முழங்குபவர். இவரின் இந்தக் கருத்துகளுக்கு எந்த மனித நேயம் உள்ளவர்களும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது. அது போல் தான் அந்தக் கட்சி ஓர் அரசியல் இயக்கம் என்பதைத் தாண்டி அனைவருக்குமான ஒரு கோரிக்கையை வைக்கும்போது தமிழ் அறிவுஜீவிகள், படைப்பாளர்கள், மக்களை நேசிக்கக் கூடியவர்கள், தமிழினத்திற்காக நடப்பவர்கள், ஓடுபவர்கள் யாரும் ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை.

பாஜகவின் தமிழகத் தலைவராக தமிழிசை தேர்ந்தெடுக்கப்பட்டதற்காகவும். பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன எச்.ராஜா கட்சிப்பதவிப் பெற்றதற்காகவும் வாழ்த்துச் சொன்ன வைகோ இப்படி ஒரு மாநாடு நடப்பது குறித்து வாய்த்திறக்கவில்லை. கத்தித் திரைப்படப் பிரச்சினையைப் பேசும் சீமான் போன்றவர்கள் தமிழர்களின் கல்விப் பிரச்சினையப் பேசவில்லை. ராமதாஸ் போன்றவர்களுக்கு சாதிப் பிரச்சினையாக இது இருக்கிறது.

ஒப்பீட்டளவில் பார்த்தால் ஒவ்வொரு ஊரிலும் தலித்துகளைவிட குறைந்த எண்ணிக்கையில்தான் வன்னிய சகோதரர்கள் படித்திருக்கிறார்கள். அதற்கு கல்வி இலவசமாக்கப்படாதது தான் காரணம். ஏன் அவர்கள் இம்மாநாட்டை தடை செய்யக் கோரினார்கள்.

கல்வி உரிமை மாநாடு ஒரு சாதிக்கானது அல்ல. ஒரு கட்சிக்கானது அல்ல. அது பொதுவானது. அனைவருக்குமானது. அதை அரசு தடைச் செய்யும் போது யாரும் அதைக் கண்டிக்கவே இல்லை. கருணாநிதி உட்பட. திருமாவளவனே நீதிமன்றத்திற்குச் சென்று தடையை உடைத்து ஆகஸ்டு 17 ம் தேதி 6 மணிக்கு நடக்க வேண்டிய மாநாட்டிற்கு அன்று பிற்பகல் அனுமதி வாங்கி அனைவருக்கும் இலவசமாக கல்வி வேண்டும் என பேச வேண்டி இருக்கிறது.

லட்சக்கணக்கில் விடுதலைச் சிறுத்தைகள் திரண்டார்கள். மழை வந்தது. மாநாடு வெற்றியடைந்தது. பல தடைகளைத் தாண்டி தமிழர்கள் தங்கள் கல்விக் கொள்கையை அறிவித்திருக்கிறார்கள்.

அது திருமாவளவன் என்னும் தலித் வாயிலிருந்து வந்திருப்பதால அனவைரும் வாயை மூடிக்கொண்டிருக்கிறார்கள். ஆதரிக்க மறுக்கிறார்கள். ஊடகங்கள் திரையிசை வெளியீடுகளையும் மயக்கும் நிகழ்ச்சிகளையும் மட்டுமே தன் பட்டியலில் வைத்திருப்பதால் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையில் அக்கறையில்லாமல் இருக்கின்றன.

மனச்சாட்சி உள்ளவர்கள் இதை நியாயம் என்பார்கள். பொதுத்தளத்தில் உள்ளவர்களே தலித்துகள் எத்தகைய அறிவும் ஆற்றலும் கொண்டிருந்தாலும் உங்களுக்காகவே போராடினாலும் ஏற்றுக் கொள்ளவே மாட்டீர்களா? 

-யாழன் ஆதி