வேட்டி அணிந்து வரத் தடை : தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

வேட்டி அணிந்து வரத் தடை:
நீதியரசர் மற்றும் வழக்கறிஞர்களை அவமதித்த 
கிரிக்கெட் கிளப் சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் வளாகத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காகச் சென்ற நீதியரசர் ஒருவரும் மூத்த வழக்கறிஞர்கள் சிலரும் வேட்டி அணிந்து சென்றதால் அவ்விழாவில் பங்கேற்க விடாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழினத்தின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து செல்வது கிரிக்கெட் கிளப் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் அச்சங்கத்தின் பாரம்பரியத்திற்கு இழுக்கு என்றும் சங்க நிர்வாகிகளால் விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது.  

தமிழ்நாட்டில் தமிழர்கள் நடத்தும் விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடையில் பங்கேற்கக் கூடாது எனத் தடை விதிப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.  ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த விதிமுறைகளை, இன்னும் அப்படியே பின்பற்றுவது வேடிக்கையாக உள்ளது.  கிரிக்கெட் கிளப் சங்கத்தினரின் இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.  

தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் மட்டுமின்றி வேறு சில தனியார் கிளப்களிலும் இதே நடைமுறையைப் பின்பற்றி வருகின்றனர்.  வேட்டி அணியவோ, செருப்பு அணியவோ கூடாது என்று தடுக்கும் அவலம் உள்ளது.  ஆங்கிலேயர்களின் உடை மற்றும் ஷு மட்டுமே அணிந்து வர வேண்டுமென்று வற்புறுத்தி வருகின்றனர்.  
கிராமப்புறங்களில் தலித்துகள் செருப்பு அணியக் கூடாது என்பதும், சென்னை போன்ற பெரு நகரங்களில் நீதிபதிகள் வேட்டி அணியக் கூடாது என்பதும் ஒரே வகையான ஆதிக்க மனநிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது. கிளப்களில் நடக்கும் இந்த அவலத்தைக் கண்டிப்பதும் கிராமப் புறங்களில் நடக்கும் அந்த வன்கொடுமைகளைக் கண்டிப்பதும் சனநாயக சக்திகளின் கடமையாகும்.  

அதேபோல, சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் தமிழ் பேசினால் தண்டனை விதிக்கப்படும் நிலை உள்ளது.  தமிழ்வழியில் பாடம் சொல்லித் தர முடியாது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் போக்கு உள்ளது.  மொத்தத்தில், தமிழ்ப் பேசக் கூடாது, தமிழர்களின் பாரம்பரியமான வேட்டி போன்ற உடைகளை அணியக் கூடாது, செருப்பு அணியக் கூடாது என்கிற இந்த அவலங்களைத் துடைத்தெறிவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.  குறிப்பாக, தனியார் கிளப்களில் நடைமுறையில் உள்ள தமிழினத்தின் பாரம்பரியத்திற்கு எதிரான இந்த அவலங்களைப் போக்குவதற்கு புதிய சட்டங்களை வரையறுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுப்பதோடு, நீதியரசர் மற்றும் வழக்கறிஞர்களை அவமதித்த கிரிக்கெட் கிளப் சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வற்புறுத்துகிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்
தலைவர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி