தலைவரின் ஆனந்தவிகடன் நேர்காணல்

“என்னை ஒரு தலைவனாகக்கூட அங்கீகரிப்பது இல்லை!”
டி.அருள் எழிலன், படம்: வீ.நாகமணி
'தி.மு.க கூட்டணி வேண்டவே வேண்டாம். தனித்துக் களம் காண்போம். நமது வாக்கு வங்கியை நிரூபிப்போம்!’ - சமீபமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள், தொல்.திருமாவளவனிடம் இந்த ஒற்றைக் கோரிக்கையை மட்டுமே முன்வைத்துப் பேசுகிறார்கள். 'இனி இழப்பதற்கு என்ன இருக்கிறது? அந்த முயற்சியையும் எடுத்துவிடுவோமே!’ என்ற மனநிலைக்கு அவரும் வந்துவிட்டதாக நிலவுகிறது ஒரு பேச்சு. அது தொடர்பாகப் பேசலாம் என்று திருமாவளவனைச் சந்தித்தால், 'வேட்டிப் பஞ்சாயத்து’ குறித்த மன உளைச்சலில் கடுகடுக்கிறார்.  
''மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து சென்றவர்களைத் தடுத்து அவமானப்படுத்திய நிகழ்வைக் கண்டித்து நானும் அறிக்கை வெளியிட்டேன். ஆனால் சிலர், 'திருமா ஏன் வேட்டி அணிவது இல்லை?’, 'வேட்டியை வெறுக்கிறார் திருமா’ என்றெல்லாம் பிரச்னையை மடைமாற்றுகிறார்கள். நான் கல்லூரி மாணவனாக இருந்து அரசியலுக்கு வந்தபோது என்ன பாணியில் உடை அணிந்திருந்தேனோ, அதே பாணியில்தான் இப்போதும் உடை அணிகிறேன். அரசியலுக்கு வந்துவிட்டதால் வேட்டி அணிந்து வேடமிடவில்லை நான். 50 வயதுக்கு மேல் வேட்டி அணியலாம் என்ற எண்ணமும் உள்ளது. மற்றபடி வேட்டி தொடர்பாக எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை. ஆனால், இதை வைத்துக்கூடவா அரசியல் செய்வார்கள்!?'' - ஏகமாகச் சொல்கிறார் திருமா. தமிழக அரசியல் அரங்கில் விடுதலைச் சிறுத்தைகளின் தாக்கம் குறித்து, அவரைக் குழப்பத்திலேயே வைத்திருக்கின்றன கூட்டணிக் கட்சிகள் என்பதை ஒப்புக்கொள்பவர், இப்போதே 2016-ம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து, வேலைகள் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.  
''2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்  தமிழகக் கூட்டணிக் காட்சிகள் எப்படி இருக்கும் என்று கணிக்க முடிகிறதா?''
''நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி  இரண்டு தொகுதிகளிலும், அ.தி.மு.க கூட்டணி 37 தொகுதிகளிலும் வெல்லும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால், 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இதே நிலை நீடிக்கும் என்று சொல்ல முடியாது. அதே சமயம் தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான தேர்தலாக இருந்தாலும்,  தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுமே தனித்துப் போட்டியிடும் என்றும் சொல்ல முடியாது. முடிந்த தேர்தலில் பா.ஜ.க தலைமையில் உருவான பொருந்தாக் கூட்டணி, நிச்சயம் சட்டமன்றத் தேர்தலில் நீடிக்காது. அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளின் கூட்டணிக்கு இடம் மாறிவிடும் என்ற நிலையில், இதே வெற்றியைத் தக்கவைக்க முடியாது. இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டே எங்கள் அரசியல் எதிர்காலத்தை நாங்கள் தீர்மானிக்க வேண்டும்!''
'' 'தி.மு.க கூட்டணியில் தொடர வேண்டாம்’ என்று உங்கள் கட்சித் தொண்டர்கள் கூறுகிறார்கள். நீங்கள் அந்தக் கூட்டணியை விட்டு விலகும் முடிவை எடுத்துவிட்டீர்களா?''
''கட்சியின் உயர்நிலைப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில், 'தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளோடு நமக்குக் கூட்டணி வேண்டாம். நமக்குப் பேரவலிமை இல்லை; போதுமான இடங்களும் கிடைப்பது இல்லை. ஆகவே, தனித்துப் போட்டியிடுவோம்’ என்று ஒருமித்தக் குரலில் சொன்னார்கள். 'ஒருமுறையேனும் தனித்துப் போட்டியிட்டால்தான், நம் வாக்கு வலிமை நமக்குத் தெரியும்’ என்றார்கள். இப்படி தமிழகம் முழுக்கவே கட்சித் தொண்டர்களின் மனநிலைகள் தனித்துப் போட்டி என்பதாகத்தான் இருக்கின்றன. அவற்றையெல்லாம் பரிசீலித்து கூட்டணியா, தனித்துப் போட்டியா என்பதை விரைவில் அறிவிப்பேன்!''
''நீங்கள் போட்டியிட்ட சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் 'தி.மு.க-வே போட்டியிடுவதாக நினைத்து கட்சியினர் வேலை செய்ய வேண்டும்’ என்று பிரசாரம் செய்தார் கருணாநிதி. ஆனாலும் தோல்வி அடைந்தீர்கள். தி.மு.க-வின் உறுதுணை இல்லாததே அதற்குக் காரணமா?''
''நாங்கள் மட்டும் தோற்று, மற்ற அனைவரும் ஜெயித்திருந்தால் இந்தக் குமுறலில் உண்மையிருப்பதாக நம்பலாம்; ஏற்கலாம். லட்ச லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க-வும் அல்லவா தோல்வியைத் தழுவி இருக்கிறது. அகில இந்திய அளவில் மோடி அலையும், தமிழக அளவில் அ.தி.மு.க மீதான அதிருப்தியின்மையுமே அவர்களின் வெற்றிக்குக் காரணம். இன்னொரு முக்கிய விஷயம், இளந்தலைமுறை வாக்காளர்களை தி.மு.க கூட்டணி கவரவில்லை. இளைஞர்களின் ஆதரவைப் பெறுவதில் அவர்கள் முனைப்பு காட்டவே இல்லை. அதுவும் இந்தத் தோல்விக்குக் காரணம்!''
''தருமபுரி திவ்யா-இளவரசன் காதலின் துயர முடிவின் அதிர்ச்சியையும் தாண்டி, அன்புமணி ராமதாஸ் தருமபுரியில் வென்றாரே... என்ன காரணம்?''
''அந்த வெற்றி பெரும்பான்மை மக்கள் விரும்பி அளித்த வெற்றி அல்ல. சுமார் மூன்றரை ஆண்டுகள் சாதி வாக்குகளைத் திரட்டுவதில் தீவிரமாகப் பணி செய்தார்கள் பா.ம.க-வினர். அப்படியும் எட்டு தொகுதிகளில் போட்டியிட்டு மூன்று  தொகுதிகளில் டெபாசிட் இழந்து, ஒன்றில் மட்டுமே வென்றிருக்கிறார்கள். பா.ம.க-வினர் போட்டியிட்ட எந்தத் தொகுதிக்கும் செல்லாத ராமதாஸ், தன் மகன் வென்றே ஆக வேண்டும் என்று தருமபுரியிலேயே தங்கியிருந்து பணி செய்தார். அந்த வகையில் தன் கட்சியினர் என்ன நினைப்பார்களோ என்றுகூட கவலைப்படாமல், தன் மகனுக்காக மட்டுமே உழைத்த ராமதாஸுக்கு 'தன்னலச் செம்மல்’ என்ற பட்டத்தை அளிக்கலாம். மற்றபடி அது கொண்டாடவோ, குறிப்பிட்டுச் சொல்லவோகூடிய வெற்றி அல்ல!''
''ஜெயலலிதாவின் மூன்று ஆண்டு கால ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''மூன்று ஆண்டு கால அ.தி.மு.க அரசில் மின்வெட்டு, குடிநீர் பஞ்சம், சாதி வன்கொடுமைகள் போன்றவை அதிகரித்திருகின்றன. ஆனாலும் மக்கள் அ.தி.மு.க-வை வெறுக்கவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பெண்கள், தலித் மக்கள், சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலைதான் தமிழகத்தில் உள்ளது. மொத்தத்தில் போற்றுதலுக்கு உரிய வளர்ச்சி என்று எதுவும் இல்லை!''
''தமிழ்த் தேசிய முன்னணியைக் கட்டுகிறார் பழ.நெடுமாறன். உங்களை அழைத்தாரா?''
''இல்லை. இதுவரை அழைப்பு இல்லை. அது பற்றி எந்தத் தகவலும்கூட எனக்குத் தெரியாது. நான் தி.மு.க கூட்டணியில் இருப்பதால், என்னை அழைக்கவில்லை என்று நினைக்கிறேன். பொதுவாகவே, தமிழ்த் தேசியவாதிகள் எங்களை தலித் முத்திரை குத்தி ஒதுக்குகிறார்கள். தலித் செயற்பாட்டாளர்களோ, 'நாங்கள் தலித் அரசியலைத் தீவிரமாக முன்னெடுக்கவில்லை’ என்று குற்றம் சாட்டுகிறார்கள். நாங்கள் என்னதான் செய்வது? அவர் அழைக்கவில்லை என்று எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நாளை அழைத்தால், இணையும் சூழல் இருந்தால் இணைவோம்!''
''அடிப்படையில் உங்கள் ஆதங்கம்தான் என்ன?''
''விடுதலைச் சிறுத்தைகள் என்பது ஒரு சாதி சங்க அமைப்பு அல்ல. எந்த ஒரு சாதிக்கான கோரிக்கையையும் நாங்கள் வைக்கவில்லை. தமிழர்களைப் பாதிக்கும் எல்லா பொதுப் பிரச்னைகளுக்காகவும் நாங்கள் போராடுகிறோம். ஆனால், எஞ்சியது என்னமோ தலித் முத்திரைதான். அனைவருக்கும் பொதுவான தலைவராகவே நான் இருக்கிறேன். என்னதான் காவிரிப் பிரச்னை, தூக்கு, ஈழத் தமிழர் நலன்... என நான் பேசினாலும், என்னை ஒரு தலைவனாக இவர்களால் ஏற்க முடியவில்லை. காரணம் சாதி. திரும்பத் திரும்ப எத்தனை முறைதான் என் ஆதங்கத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பது? அதுவும் ஒருகட்டத்தில் அலுத்துச் சலித்துவிட்டது!''

நன்றி : ஆனந்த விகடன்
30 ஜீலை 2014