கல்வியை முழுமையாகக் கட்டணமில்லாமல் வழங்குவதே பெருந்தலைவர் காமராசருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி!

கல்வியை முழுமையாகக் கட்டணமில்லாமல் வழங்குவதே
பெருந்தலைவர் காமராசருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி!

தொல்.திருமாவளவன் அறிக்கை  அனைவருக்கும் உணவு; அனைவருக்கும் கல்வி’ என்னும் புரட்சிகரமான கொள்கையின் அடிப்படையில் தமிழகத்தில் நல்லாட்சி வழங்கிய பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.  
பெருந்தலைவரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு கடைப்பிடித்து வருகிறது. அதேவேளையில் கல்வி தனியார்மயமாகவும் வணிகமயமாகவும் மாறி, ஏழை எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகி வருகிறது.  கல்வியே சிறந்த செல்வம், கல்வியே மீட்சிக்கு வழி என்னும் உண்மையை அறிந்த நிலையிலும், எளிய மக்கள் எளிதில் பெற முடியாத அளவுக்கு கல்வியை மிகப்பெரும் விலைகொண்ட பொருளாக மாற்றி வருவது பெரும் கவலையளிப்பதாக உள்ளது.  மழலையர் வகுப்புகளிலிருந்தே பல்லாயிரக் கணக்கில், இலட்சக் கணக்கில் கட்டணம் செலுத்தி கல்வி பெற வேண்டிய அவலம் பெருகியுள்ளது.  அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தனியார் கல்வி நிறுவனங்களோடு போட்டி போட இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.  இந்த முரண்பாடுகள் புதிய தலைமுறையினரிடையே மிகப்பெரும் முரண்பாடுகளையும் இடைவெளிகளையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி அளிக்க முடியாது என்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் வெளிப்படையாக சவால் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய போக்குகள் தமிழகத்தின் எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. எனவே, தமிழக அரசு கல்வித் தளத்தில் ஏற்பட்டுள்ள தனியார்மயம் மற்றும் வணிகமயத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் நெறிப்படுத்துவதற்கும் முன்வர வேண்டும்.  தனியார் கல்வி நிறுவனங்களை அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.  ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு அரசே சம்பளம் வழங்க வேண்டும்.  கல்விக் கட்டணத்தையும் அரசே நிர்ணயிக்க வேண்டும்.  இத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதன் மூலம் ஏழை எளிய மக்களும் எளிதில் கல்வி பெற வாய்ப்புகள் உருவாகும்.  அத்துடன், தமிழக அரசின் இலவசத் திட்டங்கள் அனைத்தையும் விலக்கிக்கொண்டு கல்வியை முழுமையாக கட்டணமில்லாமல் வழங்குவதற்கு முன்வர வேண்டும். இதுவே பெருந்தலைவர் காமராஜருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்
தலைவர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி