தோல்வியை கண்டு துவண்டு விடமாட்டேன்: திருமாவளவன் பேச்சு


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான எல்.இளைய பெருமாளின் 91-ம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள உடையார்குடி எல்.இ.பி. சதுக்கத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-

நான் தோல்வியை கண்டு துவண்டு விடமாட்டேன். தோற்றுவிட்டேன் என்பதற்காக அடுத்து என்ன செய்யப்போகிறேன் என்று என்னை பார்க்கிறார்கள். நான் அனைத்து தரப்பு மக்களுக்காக பாடுபடுவேன்.

இளையபெருமாள் கமிஷன் அறிக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழில் விரைவில் வெளியிடப்படும். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட சுவாமி சகஜானந்தா, இளைய பெருமாள் ஆகியோர் வழிகாட்டுதலின் படிதான் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் எனக்கு காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் கிடைத்தது.

இளையபெருமாளுக்கு சென்னையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். ஆகஸ்டு 17-ந் தேதி கல்வி வளர்ச்சி மாநாடு நடத்த உள்ளோம். அது எந்த இடத்தில் நடக்கும் என்பது பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.