மீட்புப் பணியை துரிதப்படுத்த மத்திய அரசு உதவ வேண்டும்மீட்புப் பணிகளை துரிதப்படுத்த நவீன கருவிகளைக் கொண்ட சிறப்புக் குழுவை மத்தி அரசு அனுப்ப வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை போரூரை அடுத்த மெüலிவாக்கம் பகுதியில் இடிந்து விழுந்து தரைமட்டமான அடுக்குமாடிக் கட்டடத்தை திங்கள்கிழமை (ஜூன் 30) பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் தொல்.திருமாவளவன் கூறியது:
கட்டட இடிபாடுகளை மீட்கும் பணி மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில் கால தாமதம் ஏற்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுற்றுப்புற பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மீட்புப் பணியை துரிதப்படுத்த நவீன கருவிகளைக் கொண்ட சிறப்புக் குழுவை மத்திய அரசு அனுப்ப வேண்டும்.
மேலும், இறந்தவர்களுக்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். விபத்துக்கான உண்மை காரணத்தை கண்டறிய குழு அமைக்க வேண்டும்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு போதிய இடவசதி மற்றும் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் கட்டடத்துக்கான ஒப்புதல் வழங்கிய பிறகு, மாதம் ஒரு முறை கள ஆய்வு செய்து விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகின்றவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.