விடுதலைச் சிறுத்தைகளின் விருதுகள் வழங்கும் விழா 2014

சூன் 15 - சென்னையில்..

விடுதலைச் சிறுத்தைகளின் விருதுகள் வழங்கும் விழா

விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் 

தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, கடந்த 2007ஆம் ஆண்டு முதல், பல்வேறு துறைகளில் தொண்டாற்றி வரும் சாதனையாளர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.  குறிப்பாக, சமூக நீதிப் பாதுகாப்பு, சிறுபான்மையினர் நலன்கள், தாய்த்தமிழ்ப் பாதுகாப்பு மற்றும் இனநலன்கள் ஆகியவற்றில் சிறப்பாகப் பணியாற்றிவரும் சான்றோரைத் தேர்வு செய்து இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்விழா ஆண்டுதோறும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் நடத்தப்பட்டு வந்தது.  இந்த ஆண்டு (2014) நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டதால் குறிப்பிட்ட நாளில் இவ்விழாவினை நடத்த இயலவில்லை.  எனவே, வருகின்ற சூன் 15, 2014 அன்று சென்னையில் இவ்விழா நடைபெறுகிறது.
சென்னை, எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் நடைபெறவுள்ள இவ்விழா, ‘புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, விருதுகள் வழங்கும் விழா மற்றும் அயோத்திதாசப் பண்டிதரின் நூற்றாண்டு நினைவு நாள்’ என முப்பெரும் விழாவாக ஒருங்கிணைக்கப்படுகிறது.
விழாவில் விருது பெறும் சான்றோர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் முன்னணிப் பொறுப்பாளர்கள் உரையாற்றுகின்றனர்.

2014ஆம் ஆண்டுக்கான விருதுகள் பின்வருமாறு சான்றோர்களுக்கு அளிக்கப்படுகிறது:

அம்பேத்கர் சுடர் - தோழர் ஆர்.நல்லக்கண்ணு
பெரியார் ஒளி - திருவாரூர் தங்கராசு (மறைவு)
அயோத்திதாசர் ஆதவன் - தி.பெ.கமலநாதன் (மறைவு)
காமராசர் கதிர் - எழுத்தாளர் கோபண்ணா
காயிதேமில்லத் பிறை - தோழர் அ.மார்க்ஸ்
செம்மொழி ஞாயிறு - மணவை முஸ்தபா

இவ்விழாவில் விடுதலைச் சிறுத்தைகளும், தமிழ்ச் சான்றோர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டுமென தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்
தலைவர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி