முல்லைப் பெரியாறு குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழக அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும்!

முல்லைப் பெரியாறு குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
தமிழக அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும்!
தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம் எனவும் அணை தொடர்பாக கேரள அரசு நிறைவேற்றிய அணைகள் பாதுகாப்புச் சட்டம் செல்லாது எனவும்,வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பாராட்டி வரவேற்கிறேன்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தமிழர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கிறது.  அணைக்குப் பாதுகாப்பு இல்லை என்றும்புதிய அணை கட்டவேண்டும் என்றும் இதுவரை கேரள அரசு பரப்பிவந்த பொய்யுரைகள் அனைத்தும் இந்தத் தீர்ப்பின் மூலம் அம்பலப்பட்டுள்ளன.  உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று கேரள அரசு தமிழ்நாட்டுடன் ஒத்துழைக்க வேண்டும்.  நீண்டநெடுங்காலமாக தமிழககேரள மக்களிடையே நிலவிவரும் நல்லுறவைப் பாதுகாக்க கேரள அரசும்அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 142 அடி தண்ணீர் தேக்குவதற்கு உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதில் காலம் தாழ்த்தினால் நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முடியாத சிக்கல்கள் உருவாகக் கூடும்.

இந்தத் தீர்ப்பை வரவேற்கும் அதேவேளையில்இதனை கேரளாவுக்கு எதிரான வெற்றி என்பதுபோல் சித்திரித்து இரு மாநில மக்களிடையே நாம் கசப்புணர்வை ஏற்படுத்திவிடக் கூடாது.  இதில் தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவண்

தொல்.திருமாவளவன்