''பி.ஜே.பி வெற்றிக்கு மோடி அலைதான் காரணமா?''

மக்கள் அளித்தது அல்ல... இது மாயாஜால வெற்றி!
திருமாவளவன் தீர்ப்பு!


''நாடாளுமன்றத் தோதல் முடிவுகள் குறித்து உங்கள் கருத்து என்ன?''
''தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆட்சி பீடத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பி.ஜே.பி-க்கு மக்கள் வாக்களித்துள்ளனர். காங்கிரஸுக்கு மாற்றாக பி.ஜே.பி மட்டும் இருந்ததால், அந்தக் கட்சி வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றி மக்கள் அளித்தது அல்ல. மாயாஜால வெற்றி.''
''பி.ஜே.பி வெற்றிக்கு மோடி அலைதான் காரணமா?''
''மோடி அலையால் வெற்றி என்று சொல்ல முடியாது. மோடி அலை வீசியிருந்தால், தமிழகத்தில் பி.ஜே.பி கூட்டணி கட்சிகள் தோல்வியுற்று இருக்காது. வைகோ, சுதீஷ் போன்றவர்கள் வெற்றிபெற்று இருக்க வேண்டும். எனவே, தமிழகத்தில் மோடி அலை வீசவில்லை. தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று பி.ஜே.பி-யே எதிர்பார்க்கவில்லை. தேர்தல் முடிவுக்கு முன்புகூட ஒரு உறுப்பினர் கொண்ட கட்சி ஆதரித்ததாலும் அதை ஏற்றுக்கொள்வோம் என்று பி.ஜே.பி தெரிவித்தது. ஆகவே, சரியான எதிர்க்கட்சி இல்லாததால்தான் பி.ஜே.பி வெற்றிபெற்று இருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பன்னாட்டு நிறுவனங்களின் துணையோடு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மேற்கொண்ட பிரசாரம், புதிய வாக்காளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதை பி.ஜே.பி-யின் வெற்றி என்பதைவிட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் வெற்றி என்றே சொல்ல வேண்டும்.''
''தமிழகத்தில் அ.தி.மு.க அதிக அளவில் வெற்றிபெற்றதற்கு என்ன காரணம்?''
''தமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க மீது கடுமையான அதிருப்தி நிலவியதை தேர்தல் களத்தில் வெளிப்படையாகக் காண முடிந்தது. ஓட்டுக் கேட்கச் சென்ற அ.தி.மு.க வேட்பாளர்களை பல இடங்களில் மக்கள் முற்றுகையிட்டு விரட்டியடித்தனர். மின்வெட்டு, குடிநீர் பற்றாக்குறை, மிக்ஸி, கிரைண்டர் போன்ற இலவசத் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாகக் கிடைக்காதது போன்றவை ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருந்ததை வெளிப்படையாகக் காட்டியது. ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொட்டி வெற்றியைப் பறித்திருக்கிறார்கள்.''
''தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகள் எப்படி இருந்தது?''
''இந்தியாவிலேயே தமிழகம், ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களில்தான் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்கு வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. பண விநியோகிதத்தைத் தடுக்க முடியவில்லை என்று தமிழக தேர்தல் கமிஷனர் பிரவீன்குமாரே ஒப்புக்கொண்டு இருக்கிறார். தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படும் என்றால், ஆந்திராவிலும் தமிழகத்த்திலும் மறுதேர்தல் நடத்த ஆணையிட வேண்டும். தமிழகத்தில் 144 தடை உத்தரவுப் பிறப்பித்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு இருக்கிறது தேர்தல் ஆணையம். தேர்தல் அதிகாரிகளான சில கலெக்டர்களும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளனர்.''
''தேர்தல் நடைமுறை குறித்து உங்கள் கருத்து என்ன?''
''மின்னணு வாக்கு இயந்திரங்களை தயாரிக்கும் ஜப்பான் மற்றும் அமெரிக்காவில்கூட மின்னணு வாக்கு இயந்திரங்களில் வாக்களிக்கும் நடைமுறை இல்லை. ஆனால், ஜனநாயக நாடான இந்தியாவில் மட்டும் இந்த முறை பின்பற்றுவதற்குக் காரணம் என்ன என்பது தெரியவில்லை. யாருக்கு ஓட்டுப் போட்டோம் என்பதை வாக்காளர்கள் உறுதிசெய்யும் வகையில் வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். கடந்த தேர்தலில் நான் வெற்றிபெற்றபோதே இதை வலியுறுத்தினேன். எனவே நம்பத்தகுந்த வாக்குப்பதிவு முறையை கொண்டுவர வேண்டும்.''
''உங்கள் தோல்விக்கு என்ன காரணம்?''
''தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் எல்லாம் எனக்கு சாதகமாகவே இருந்தன. தேர்தல் முடிவு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவருகிறேன். இந்தத் தேர்தலில் தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் முழு ஒத்துழைப்பு கிடைத்தது. கடந்தமுறை வெற்றிபெற்றபோது சிதம்பரம் தொகுதி வளர்ச்சியில் அதிக அக்கறை செலுத்தினேன். ஆனால், அதையும் மீறி ஜனநாயகத்தைப் பணநாயகம் வென்றுவிட்டது.''
எஸ்.மகேஷ், படம்: ஜெ.வேங்கடராஜ்

நன்றி : ஜீனியர் விகடன் 25 மே, 2014