போர்க் குற்ற விசாரணைக்கு ஆளாகியிருப்பவரை விருந்தினராக அழைப்பதா-? தொல்.திருமாவளவன் கண்டனம்

போர்க் குற்ற விசாரணைக்கு ஆளாகியிருப்பவரை 
விருந்தினராக அழைப்பதா-?

பிரதமர் பதவியேற்புக்கு இராஜபக்சேவை அழைத்ததற்கு 
தொல்.திருமாவளவன் கண்டனம்

இந்தியப் பிரதமராக திரு.நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்றுக்கொள்ளும் நிகழ்வுக்கு இந்தியாவின் அண்டை நாடுகளைச் சேர்ந்த பிரதமர்களுக்கும் அதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  அண்டை நாடுகளோடு இந்திய அரசு நல்லுறவைப் பேணுவதை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது.  குறிப்பாக, பாகிஸ்தானுடன் தற்போது நிலவிவரும் பகையை மாற்றி இணக்கத்தை ஏற்படுத்துவது இரண்டு நாடுகளுக்கும் நல்லது மட்டுமின்றி, தெற்காசியா முழுமைக்குமே அது பயன்தருவதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.  நேரு அமைச்சரவையிலிருந்து புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பதவி விலகியபோது, 'அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணாததே இராணுவப் செலவுகள் அதிகரிப்பதற்குக் காரணம்' என்று குறிப்பிட்டிருந்தார். அது இன்றைக்கும் பொருந்தக்கூடியதே.

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசைப் போலல்லாது, அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள திரு.நரேந்திரமோடி அவர்கள் முற்பட்டிருப்பது பொதுவாக வரவேற்கத்தக்கதுதான்.  ஆனால், இலங்கைக்கு அது பொருந்துமா என்பதுதான் நமக்கு எழும் கேள்வியாகும்.  பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் இராஜபக்சே தற்போது சர்வதேச சமூகத்தின் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறார்.  அவர் இழைத்த போர்க்குற்றங்களை இப்போது ஐ.நா. மனித உரிமை ஆணையம் விசாரணை செய்து வருகிறது.  இந்நிலையில், அவரை தனது பதவியேற்பு நிகழ்ச்சிக்கு திரு.நரேந்திர மோடி அவர்கள் அழைத்திருப்பது இந்தியாவிலிருக்கும் தமிழர்களின் உணர்வைப் புண்படுத்துவது மட்டுமின்றி நீதிக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கும் சர்வதேச சமூகத்தின் முயற்சிகளுக்கும் பின்னடைவை உண்டாக்கும்.

ஏனைய அண்டை நாடுகளைப்போல இலங்கையை நாம் பார்க்க முடியாது.  ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களைப் படுகொலை செய்து ஒவ்வொரு நாளும் இந்தியாவுக்கு எதிரான மறைமுக யுத்தத்தை இலங்கை நடத்தி வருகிறது.  இந்த வேறுபாட்டைப் புரிந்துகொண்டு இந்தியப் பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
ஒருவேளை இராஜபக்சே பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வாரேயானால், தமிழக முதல்வரும், பிற தமிழக அரசியல் தலைவர்களும் அந்நிகழ்ச்சியைப் புறக்கணித்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மத்திய அரசுக்குத் தெரிவிக்க முன்வரவேண்டும் என்றும் தோழமையோடு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இவண்
தொல்.திருமாவளவன்