பயங்கரவாதத்தை முறியடிப்போம்! சென்னை குண்டுவெடிப்புக்கு தொல்.திருமாவளவன் கண்டனம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண் பலியாகியுள்ளார். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.  குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்ட பின் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினேன்.  இந்தப் பயங்கரவாதச் செயலுக்குப் பொறுப்பானவர்கள் கண்டறியப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

பொதுத் தேர்தல் வேளையில் நிகழ்ந்துள்ள இந்தக் குண்டுவெடிப்பையடுத்து இதற்கு அரசியல் சாயம் பூசும் முயற்சிகள் நடக்கின்றன.  அது சரியானதல்ல. இதைப் பயன்படுத்தி ஊகங்களை வெளியிட்டு வதந்திகளைப் பரப்புவது சமூகத்தில் தேவையற்ற பதற்றத்தையும் குழப்பத்தையும்தான் உருவாக்கும். எனவே, எல்லோரும் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டிய நேரமிது.  சமூக அமைதியைக் காப்பாற்றுவதில் அனைவருக்கும் பங்கிருக்கிறது என்பதை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்.

குண்டுவெடிப்பில் பலியானவரின் குடும்பத்திற்கு ரூ. 10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.  அதுபோலவே, காயமடைந்தவர்களுக்கும் உரிய சிகிச்சையும் நிவாரணமும் அளிக்கப்பட வேண்டும்.

சனநாயக அமைப்பில் அதற்குப் புறம்பான எந்தவொரு நடவடிக்கைக்கும் இடம் கிடையாது. பயங்கரவாதச் செயல் என்பது நாட்டின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் மிகப்பெரும் தடையாகவே இருக்கிறது.  கடந்த பல ஆண்டுகளாக அமைதி நிலவிவரும் தமிழகத்தில் இத்தகைய கொடுஞ்செயல்கள் தலையெடுப்பது கவலையளிக்கிறது.  இவற்றைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து தடுப்பதோடு தமிழகத்தில் அமைதியைக் காப்பாற்றிட அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுத்திடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவண்
தொல்.திருமாவளவன்
தலைவர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி