நான் எந்த சமூகத்திற்கும் எதிரானவன் அல்ல; அவதூறுகளை நம்ப வேண்டாம்

நான் எந்த சமூகத்துக்கும் எதிரானவன் அல்ல. அப்படி யாராவது அவதூறு பரப்பினால் அதை நம்ப வேண்டாம் என சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன் கூறினார்.
சிதம்பரம் அருகே ஜெயங்கொண்டப்பட்டினம் கிராமத்தில் உள்ள ஸ்ரீசெல்லியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி அவர் பேசியது: ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தமிழர்களுக்காகவும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களின் வருமான உச்சவரம்பு ரூ.4.5 லட்சம் என அரசு விதித்துள்ளது. இந்த வரம்புக்கு மேல் உள்ளவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கிடையாது என அரசாணை சொல்கிறது. எனவே நான் பிரதமரை சந்தித்து, வருமான வரம்பினை ரூ.12 லட்சமாக உயர்த்த வேண்டும் என கோரி மனு கொடுத்தேன். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், வருமான வரம்பை ரூ.9 லட்சமாக உயர்த்தி வழங்கினார். இதன் மூலம் வன்னியர், பிள்ளைமார், முதலியார் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் அரசாணை பெற்று தந்தேன்.
எனவே நான் எந்த சமூகத்துக்கும் எதிரானவன் அல்ல. அப்படி யாராவது அவதூறு பரப்பினால் அதை நம்ப வேண்டாம்.
சிதம்பரம் தொகுதியில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை அமைக்க போராடுவேன். மேலும் தடுப்பணை அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முதல் தவணையாக ரூ.50 லட்சம் வழங்குவேன் என வாக்குறுதி அளிக்கிறேன் என்றார் அவர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கடலூர் மாவட்ட திமுக செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திருமாவளவனை அறிமுகப் படுத்திப் பேசினார்.
பிரசார தொடக்கக் கூட்டத்தில் குமராட்சி ஒன்றிய திமுக செயலாளர் ரா.மாமல்லன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் வன்னிஅரசு, மோ.எல்லாலின், கவிஞர் சேரன், நந்தன், கடலூர் மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக ஸ்ரீசெல்லியம்மன் கோயிலில் சிறப்பு அர்ச்சனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. வேட்பாளர் தொல்.திருமாவளவன், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் வழிபட்டனர். பின்னர் திருமாவளவனுக்கும், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கும் மலர் மாலை, மலர் கிரீடம் அணிவித்து, வீரவாள் வழங்கி ஊர் மக்கள் கௌரவித்தனர்.