சிதம்பரத்தில் எழுச்சித் தமிழரை ஆதரித்து கலைஞர்சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் எழுச்சித் தமிழரை ஆதரித்து சிதம்பரத்தில் வியாழக்கிழமை இரவு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் பேசியதாவது:– 

இன்று மாலை நான் பத்திரிகையில் படித்து பார்த்தேன், எனக்கு முன்னால் பேசியவர்கள் குறிப்பிட்டது போல இந்தியாவினுடைய பிரதமராக வீற்றிருக்கக்கூடிய வகையில், போட்டி க்களத்திலே இருப்பவராக நரேந்திரமோடி விளங்குகிறார். அவரை வெற்றி பெறச்செய்வதற்கு முன்பு, வெற்றிபெறச்செய்யலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்வதற்கு முன்பு அவரைப்பற்றிய சில உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். திராவிட இயக்கத்துக்கு அவரும், அவரைச்சேர்ந்த கட்சிக்காரர்களும் என்றைக்குமே பகைவர்கள் தான். தமிழகத்தில் தி.மு.க.வின் ஆக்கமும், ஊக்கமும் இருக்கிற வரையில் எங்கள் அணையைத்தாண்டி வேறு யாரும் வெற்றி கிட்ட விடலாம் என்று எண்ணாதீர்கள். நாங்கள் மதச்சார்பற்ற கொள்கையில் அழுத்தமான நம்பிக்கை உள்ளவர்கள். நாங்கள் தமிழகத்திலும் சரி, இந்தியாவில் உள்ள பல பகுதிகளிலும் சரி, மதக்கொள்கைக்கு மதச்சார்பான கொள்கைக்கு அணுவளவும் இடம் பெற மாட்டோம். 

நாங்கள் அதை அனுபவத்திலே உணர்ந்து சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம், தமிழ்நாட்டில் உள்ள தலைவர்களும் சரி, இந்தியாவில் உள்ள தலைவர்களும் சரி, நான் தான் பிரதமர் என்று மார்தட்டிக்கொண்டு இருக்கிறார்கள். நான் தான் பிரதமர் என்று சொல்பவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தி.மு.க. சார்பில் நாங்கள் யாரும் பிரதமராக வர வேண்டும் என்று சொல்ல வில்லை. எனக்கு முன்பு பேசிய தம்பிமார்கள் குறிப்பிட்டது போல, நாங்கள் பிரதமர்களை உருவாக்குபவர்களே தவிர நாங்களே பிரதமராக வர வேண்டும் என்று சொல்பவர்கள் அல்ல. 

அப்படி உருவாக்கப்பட்ட பிரதமர் யார்–யார்? என்று நாட்டுக்கு நன்றாக தெரியும். அனுபவம் மிகுந்தவர்களுக்கு இது தெளிவாக தெரியும். சோனியாகாந்தி அம்மையார் பிரதமராக வர வேண்டும் என்று நான் பாடுபட்டேன், அதை எனக்கு முன்னாலேயே பேசியவர்கள் சொன்னார்கள், அவர் பிரதமராக வரவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் நாங்களும் பாடுபட்ட போது, என்ன சொன்னார்கள் அந்த அம்மையார் இந்தியரே அல்ல அவர்கள் இந்தியாவில் பிரதமராக வர தகுதியற்றவர் என்று. அப்போது அவர்கள் சொன்ன போது, அவர் இந்தியர்க இல்லை என்று எப்படி சொல்ல முடியும்? ராஜீவ்காந்தி இந்தியர் தானே, அவருடைய துணைவியார் சோனியாகாந்தி அம்மையார் இந்தியர் என்ற முறையிலே காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக வரவும் கூடுமானால் இந்திய பிரதமராக வரவும் பொருத்தமானவர் தான் என்று ஓங்கி அடித்து சொன்னது இந்த கருணாநிதி தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 

ஆனால் அதற்கு பிறகு இன்றைக்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள பல்வேறு குழப்பங்களால் அடுத்த பிரதமராக வரப்போகிறவர் யார்? என்ற கேள்விக்கு விடை காண அரசியல் அறிஞர்கள், மேதைகள் எல்லாம் இன்றைக்கு சிந்தனை செய்து கொண்டு இருக்கிற போது, இந்த தேர்தல் வந்து விட்டது. இந்த தேர்தலிலே நாம் மீண்டும் யாரை தேர்ந்து எடுப்பது என்ற அந்த கேள்விக்கு விடைக்காணத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். நீங்களும் வந்திருக்கிறீர்கள். நாம் எல்லோரும் கூடி எடுக்க வேண்டிய முடிவு தான் அடுத்த பிரதமர் யார் என்கிற முடிவாகும். நரேந்திரமோடி சுத்தசுயபிரகாசம், அவர் மீது எந்தவிதமான அப்பழுக்கும் இல்லை, அவர் எதையும் மறைக்க மாட்டார் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்வார் என்று நேற்று வரை சொன்னார்கள். இன்று மாலை பத்திரிகையில் பார்த்தால், அவருக்கு ஒரு துணைவியார் இருக்கிறார் என்ற செய்தியை இத்தனை நாள் நரேந்திரமோடி நாட்டுக்கு சொல்லவில்லை. இன்றைக்குத்தான் எனக்கு ஒரு மனைவி இருக்கிறார். நான் தேர்தலுக்காக சமர்ப்பித்த விண்ணப்ப மனுவில் அதை குறிப்பிடவில்லை, குறிப்பிட தாமதித்து விட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.

தேர்தலுக்காக தாக்கல் செய்கிற வேட்புமனுவில் குடும்பத்தினர் பெயரை சொல்ல வேண்டியது அவசியம், ஆனால் செய்யத்தவறினால் மனைவியினுடைய பெயரையோ, மகனுடைய பெயரையோ குறிப்பிட தவறினால் அது இந்திய தேர்தல் ஆணையத்தின் படி குற்றம். அதற்கு வேறு பரிகாரம் இதுவரை காணப்படவில்லை. ஆனால் நரேந்திரமோடி தனக்கு திருமணம் ஆனதை இதுவரை சொல்லாமல் இருந்தார் என்றால் அவர் பிரதமராவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

ஒருவேளை சிதம்பரம் பொதுக்கூட்டத்திலே நான் இதை தெரிவிப்பதை நாளையத்தினம் அவர்கள் அதை சொல்லலாம். எனக்கு ஒரு மனைவி இருந்தது உண்மை தான் அதை நான் மறந்து போய் விட்டுவிட்டேன் என்று சொன்னால் மனைவியையே மறந்து விட்டாரா என்ற கேலிச்சிரிப்பு எழும். அதை பொருட்படுத்தாமல் நரேந்திரமோடி நான் செய்த தவறை தனக்கு மனைவி இருந்ததை மறைத்த அந்த தவறை எப்படி இந்த தேர்தலில் போட்டியிட போகிறார் என்பதையெல்லாம் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும். எனவே நான் அதை தேர்தல் ஆணையத்துக்கே விட்டுவிட்டேன். 

அவர்கள் முடிவு செய்யட்டும். எப்படி முடிவு செய்கிறார்கள் என்று பார்ப்போம். ஏதோ நரேந்திர மோடியின் மீது குற்றத்தை சுமத்த வேண்டும் என்பதற்காக இந்த குற்றத்தை சுமத்த வில்லை. உலகத்துக்கு, இந்திய நாட்டு மக்களுக்கு, ஒரு ரகசியத்தை சொன்னேன் அவ்வளவு தான். எப்படி தனது மனைவி இருப்பதை கூட சொல்லாமல் அவருடைய பெயரால் இவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை கூடவெளியிடாமல், அதை பரம ரகசியமாக வைத்திருந்தார் என்றால், நாளைக்கு இந்த நாட்டு மக்களுடைய கேள்விக்கு பதில் சொல்ல வேண்டாமா? அப்படி பதில் சொல்கிற நேரத்திலே, அந்த பதிலை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொள்ளுமா? ஏற்றுக்கொள்ளதா? என்பதை, விரைவிலே தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஒரு வேளை அறிவிக்காவிட்டால், மனைவி இருந்த போது, அதை மறைக்கின்ற நரேந்திரமோடி, நாளைக்கு எதை மறைக்க மாட்டார் என்றெல்லாம் கேள்வி எழுந்தால், நாடு என்ன ஆகும். நாட்டிலே ஆட்சி எப்படி நடைபெறும் என்பதை தயது செய்து, விரைவில் நரேந்திர மோடி பற்றி, அவர் நல்லவர், வல்லவர் என்று கருதிக்கொண்டு இருந்தவர்கள், சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். 

ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய 2 இலக்குகளோடு கூட்டணி வைத்து, இந்த முற்போக்கு கூட்டணியில் தான், நாங்கள் இன்றைக்கு போட்டியிடுகிறோம். சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கு இந்த அணியிலே 2 இடம் அளித்து இருக்கிறோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும், மனித நேய மக்கள் கட்சிக்கும், தலா ஒன்று வீதம் 2 இடங்கள் அளிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் ஜெயலலிதா அம்மையார் இஸ்லாமிய சமுதாய இயக்கங்களுக்கு இடம் அளிக்க வில்லை. ஆனால் இஸ்லாமியர்களுக்கு நான் விரோதி அல்ல என்று மட்டும் அவர் சொல்ல தயங்குவதில்லை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கும் இடம் தர வில்லை. ஏன் நேற்று வரை தங்களோடு தோழமையோடு இருந்த கம்யூனிஸ்டு கட்சிகளையும் காலை வாரி விட்டார். எனது வேண்டுகோளுக்கு இணங்க, இந்த தொகுதியில் வெற்றி வாகை சூடுகிற வாய்ப்பை, திருமாவளவனுக்கு நிச்சயமாக தர வேண்டும். இவ்வாறு பேசினார்.