சிங்கள அதிபர் இராஜபக்சே ஐ.நா. பொதுப்பேரவையில் உரையாற்றுவதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், டெசோ தீர்மானத்தின்படி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்று (25-9-2014)  கருப்பு நாள் கடைப்பிடிக்கிறது. அதனையொட்டி காலை 10 மணியளவில் சென்னை, அசோக் நகர், நூறடிச் சாலையில் உள்ள கட்சியின் அலுவலகமான தமிழர் திடலில், தலைவர் தொல்.திருமாவளவன் கருப்புக்கொடி ஏற்றி கண்டன முழக்கங்களை எழுப்பினார்.   விடுதலைச் சிறுத்தைகள் ஏராளமானோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
தமிழக அரசு மின் திருட்டையும் - ஊழலையும் தடுத்தாலே 
மின் கட்டணத்தை உயர்த்தவேண்டிய அவசியம் இருக்காது!

தொல்.திருமாவளவன் அறிக்கை


தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் வாயிலாக மின்கட்டண உயர்வுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அதனடிப்படையில், அக்டோபர் மாதத்தில் மின் நுகர்வோர்களிடம் கருத்துக்கேட்பு நிகழ்வையும் நடத்துவதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் வாயிலாக தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இக்கருத்துக் கேட்பானது பொதுமக்களிடையே மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புகள் வலுப்பெற்றுவிடக்கூடாது என்பதற்காக நடத்தப்படுகிறது. ஏற்கெனவே, உணவுப் பொருட்களின் கட்டுக்கடங்காத விலையேற்றத்தால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் தற்போது மின்கட்டணத்தையும் உயர்த்தினால் எவ்வாறு அவர்களால் தாங்கிக்கொள்ள இயலும். 


தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ரூபாய் 6854 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்தில் காலங்காலமாகத் தொடரும் மின் திருட்டையும் மின் உற்பத்தி நிலையங்களில் நடைபெறும் பெருமளவிலான ஊழல்களையும் தடுத்து நிறுத்தினாலே மின்கட்டணத்தை உயர்த்தவேண்டிய தேவையோ, தமிழக அரசு அதற்கான மானியத்தை அளிக்கவேண்டிய தேவையோ இருக்காது. எனவே, தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணத்தைக் கைவிடவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது. 

இவண்
தொல்.திருமாவளவன்
இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானித்துக்கொள்ளும் அதிகாரம் 
மாநில அரசுகளுக்கே வழங்கப்பட வேண்டும்
9வது அட்டவணை தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய 
மத்திய அரசு முன்வர வேண்டும்

இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க தமிழக அரசுக்கும் 
அனைத்து இயக்கங்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள்!

தொல்.திருமாவளவன் அறிக்கை!

தமிழ்நாட்டில் நடைமுறையிலிருக்கும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க சமூகநீதியில் அக்கறை உள்ள அனைத்து இயக்கங்களும் முன்வரவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில்தான் 69 விழுக்காடு இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.  மண்டல் குழு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பில் இடஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டிற்கு மேல் போகக் கூடாது என கூறப்பட்டது. அதற்குப் பிறகு வந்த பல்வேறு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளும் இந்த 50 விழுக்காட்டு வரம்பை உறுதிப்படுத்தியுள்ளன.  அதை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் எதுவும் இயற்றப்படாத நிலையில் உச்சநீதிமன்றம் விதித்த அந்த வரம்பே தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியாக விளங்குகிறது.

இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் வரம்புக்கு அதிகமாக தமிழகத்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டபோது அன்றைக்கு முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் இடஒதுக்கீடு தொடர்பான தமிழக சட்டத்திற்குப் பாதுகாப்பு அளிக்கும்பொருட்டு அதனை அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கச் செய்தார்.  ஆனால், 2007ஆம் ஆண்டு சனவரி 11ஆம் நாள் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 1973ஆம் ஆண்டுக்குப் பிறகு 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட எந்தவொரு சட்டத்தையும் உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்து ரத்து செய்யலாம் என்று கூறிவிட்டது.  அதன் விளைவாக, 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் தமிழக சட்டத்திற்கு இருந்த பாதுகாப்பு பறிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக இரண்டு வாரத்திற்குள் தமிழக அரசு பதில் மனு செய்யத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளது. தற்போதுள்ள அரசியல் சூழலில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.  இதனைக் கவனத்தில்கொண்டு இந்தச் சட்டத்தைப் பாதுகாத்திடவும் சமூகநீதியைக் காப்பாற்றிடவும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென தமிழக அரசையும், சமூகநீதியின்பால் பற்றுக்கொண்ட இயக்கங்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானித்துக்கொள்ளும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே வழங்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றம் 9வது அட்டவணை தொடர்பாக வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும்.  இந்தக் கருத்துக்களை வலியுறுத்திடுமாறு அனைவரையும் வேண்டுகிறேன்.

இவண்
தொல்.திருமாவளவன்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆண்டுக்கு 1500 கோடிக்கு மேல் இலாபம் ஈட்டுகிற நிறுவனமாக இயங்கி வருகிறது.   'மினி ரத்னா', 'நவரத்னா' எனும் தகுதிகளைப் பெற்று வளர்ச்சியடைந்துள்ள இந்நிறுவனத்தில் சுமார் 13,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்திற்கு நீண்ட காலமாகப் பணியாற்றி வருகின்றனர்.  இவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  ஆனால், என்.எல்.சி. நிறுவனம் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கையினைத் தொடர்ந்து புறந்தள்ளி வருகிறது.

இந்நிலையில், கடந்த 3-9-2014 முதல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, போனஸ் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனைத் தொடர்ந்து தொழிற்சங்கத் தலைவர்களுடன் நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை.  ஒப்பந்தத் தொழிலாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதால் நிர்வாகம் எந்த வகையிலும் நலிவடைவதற்கு வாய்ப்பில்லை.  ஆனால், இந்திய அரசும், என்.எல்.சி. நிர்வாகமும் இதில் தொடர்ந்து அடம்பிடிப்பது ஏனென்று விளங்கவில்லை.

கடந்த 1991க்குப் பிறகு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டனவே தவிர புதிதாக தொழிலாளர்கள் பணியமர்த்தல் நிகழவேயில்லை.  1991க்குப் பிறகு ஆண்டு தோறும் பணி ஓய்வின் மூலம் நூற்றுக்கணக்கான நிரந்தரத் தொழிலாளர்கள் வெளியேறுவதால் ஏற்படும் பணிச் சுமை இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் உழைப்பின் மூலமே ஈடு செய்யப்படுகிறது.  கூடுதல் நேரம், கூடுதல் பணி என உழைத்தாலும் அவர்களுக்கு வழங்கப்படுகிற ஊதியம் மிகக் குறைவானதே ஆகும். 

எனவே, ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை என்.எல்.சி. நிர்வாகம் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்.  கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ளதைப் போல ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான ஊதியக் குழுவினை உடனே அமைத்திட வேண்டும்.  அக்குழுவின் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரச்சனைகளை உரிய காலக்கெடுவில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும்.  அதுவரையில் இடைக்காலமாக அவர்களுக்கான ஊதியத்தை ரூபாய் இருபத்தைந்தாயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டுமென என்.எல்.சி. நிர்வாகத்தையும் இந்திய அரசையும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

ஏற்கனவே கடுமையான மின்வெட்டுச் சிக்கலால் தமிழகம் பாதிக்கப்பட்டுவரும் சூழலில் என்.எல்.சி. நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டம் தொடருமேயானால் மேலும் கடுமையான மின்வெட்டுப் பாதிப்பு உருவாகும்.  எனவே என்.எல்.சி. நிர்வாகமும் இந்திய அரசும் இதில் மெத்தனம் காட்டாமல் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முன்வர வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்
எதிர்வரும் செப்டம்பர் - 18 அன்று நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்களில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்பதில்லை என கடந்த 01.09.2014 அன்று கட்சியின் உயர்நிலைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை என்பதுடன், யாருக்கும் ஆதரவு அளிக்கவுமில்லை. 

இந்நிலையில், இசுலாமிய இயக்கங்களின் கூட்டமைப்புக்கான ஒருங்கிணைப்பாளர் திரு.அப்போலோ அனிஃபா அவர்கள் 06.09.2014 அன்று நேரில் சந்தித்து, வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளர் திரு.இப்ராஹிம் அவர்களுக்கு மட்டும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அத்துடன், வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநிலத் தலைவர் திரு.செ.நா.சிக்கந்தர் அவர்கள் 08.09.2014 இன்று வேளச்சேரி அலுவலகத்தில் நேரில் சந்தித்து தமது கட்சியின் வேட்பாளர் திரு.இப்ராஹிம் அவர்களுக்கு ஆதரவு கோரி கடிதம் வழங்கினார்.

இதனடிப்படையில், விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாட்டைச் சற்று தளர்த்தி, கோவை மாநகராட்சிக்கான மேயர் வேட்பாளராக வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் சார்பில் போட்டியிடும் திரு.இப்ராஹிம் அவர்களுக்கு ஆதரவளிப்பது என முடிவு செய்யப்படுகிறது. 

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இசுலாமிய அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து, கோவையில் அப்போது போட்டியிட்ட இசுலாமிய வேட்பாளரை விடுதலைச் சிறுத்தைகள் ஆதரித்தது. அதே அடிப்படையில், தற்போது நடைபெறவுள்ள இடைத்தேர்தலிலும் கோவை மேயர் வேட்பாளர் திரு.இப்ராஹிம் அவர்களை ஆதரிப்பது என கட்சி முடிவு செய்கிறது. 

இதனடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மேயர் வேட்பாளர் திரு.இப்ராஹிம் அவர்களின் வெற்றிக்கு முழுமையாக, தீவிரமாகக் களப்பணியாற்ற வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.

இவண்,
தொல்.திருமாவளவன்
தகுதித் தேர்வின் அடிப்படையில் பட்டதாரி 
ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்

தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்


பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் பதிவு மூப்பு முறை கடந்த ஆட்சியின்போது பின்பற்றப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்குப் பிறகு தகுதித் தேர்வு நடத்தி அதில் 150 மதிப்பெண்ணுக்கு 90 மதிப்பெண்கள் எடுத்தால் அவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், கடந்த 2011-12ஆம் ஆண்டில் பணி நியமனங்கள் செய்யப்பட்டன.

2013 ஆகஸ்டு 18 அன்று நடைபெற்ற தகுதித் தேர்வில் ஆறரை இலட்சம் பேர் கலந்துகொண்டனர்.  அவர்களில் 14,700 பேர் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துத் தேர்ச்சி பெற்றனர். கடந்த சனவரி மாதத்தில் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தது.  பணிநியமன ஆணை வழங்கப்படும் என அவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் ‘வெயிட்டேஜ்’ முறை என ஒன்றைப் புதிதாகப் புகுத்தி தேர்ச்சி பெற்றிருந்த ஆயிரக் கணக்கானோருக்கு பணி கிடைக்காத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.

தகுதித் தேர்வில் கலந்துகொண்டு அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்த போதிலும் இந்தப் புதிய முறையின் காரணமாக சுமார் 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதே நிலை நீடித்தால் எதிர்காலத்திலும்கூட அவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைப்பதற்கு வாய்ப்பற்ற நிலை உருவாகியுள்ளது.  தேர்வில் வெற்றி பெற்றும் பணி கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக கடந்த பல நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்றைய தினம் அவர்களில் 4 பேர் விஷமருந்தித் தற்கொலைக்கு முயன்ற நிலையில்,  தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட அனைவருக்கும் பணி ஆணை வழங்குவதே ஞாயமானதாகும்.  இந்தப் பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணி ஆணை வழங்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்
உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்களில்
விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்காது

உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம், சென்னை, அசோக் நகர், நூறடிச் சாலையிலுள்ள ‘வெளிச்சம்’ அலுவலகத்தில் 1-9-2014 திங்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது.  கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டு பின்வரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.தீர்மானம்


செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்களில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்பதற்குரிய கால அவகாசத்தைக் கொடுக்காமல் தமிழகத் தேர்தல் ஆணையம் திடீரென அறிவிப்புச் செய்துள்ளது.  இதனால், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியைத் தவிர, பெரும்பாலான பிற கட்சிகள் இந்த இடைத்தேர்தல்களைப் புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளன.  தமிழகத் தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு உள்ளாட்சி இடைத்தேர்தல்கள் சனநாயகபூர்வமாக நடைபெறுமா என்ற அய்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இந்நிலையில், இந்தத் தேர்தல்களில் பங்கேற்றுப் போட்டியிடுவதென்பது தமிழகத் தேர்தல் ஆணையத்தின் ஆளுங்கட்சிக்கு ஆதரவான எதேச்சதிகாரப் போக்குக்கு ஆதரவு அளிப்பதாக அமைந்துவிடும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருதுகிறது. 
எனவே, இந்த இடைத்தேர்தல்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்காமல் புறக்கணிப்பது என இந்த உயர்நிலைக் குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்
தலைவர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி